search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் கைதி மர்ம மரணம்
    X
    சேலம் கைதி மர்ம மரணம்

    சேலம் கைதி மர்ம மரணம் - 3 நாட்கள் அடைத்து வைத்து போலீசார் சித்ரவதை செய்தனர் - மனைவி கண்ணீர் பேட்டி

    3 நாட்களும் எங்களை சித்ரவதை செய்தார்கள். ஒவ்வொரு நாளும் விடிந்தவுடன் போலீசார் வந்து விடுவார்களோ என பயத்துடனே இருந்தோம் என மரணமடைந்த கைதியின் மனைவி கூறியுள்ளார்.
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி இவரது வீட்டில் 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பான புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா கோட்டப்பட்டியை சேர்ந்த குமார் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் சந்தேகத்தின்பேரில் சேலம் கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரன் (45), அவருடைய மனைவி ஹம்சலா(32) ஆகியோரை பிடித்து சேந்தமங்கலம் போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி விட்டு கடந்த 11-ந்தேதி பிரபாகரனை நாமக்கல் கிளை சிறையிலும், ஹம்சலாவை சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் சிறையிலும் அடைத்தனர். அன்று பிரபாகரனுக்கு உடல் நிலை மோசடைந்தது. நள்ளிரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரபாகரன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் தாக்கியதால் தான் பிரபாகரன் இறந்தார் என கூறி உடலை வாங்க மறுத்து தொடர்ந்து உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு 3 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள். மேலும் ஆஸ்பத்திரி அருகே உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து சேலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கலைவாணி, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பிரபாகரன் மரணம் தொடர்பாக டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர், நஜ்மல்ஹோடா அதிரடியாக விசாரணை நடத்தி சேந்தமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், பூங்கொடி, ஏட்டு குழந்தைவேலு ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பிரபாகரன் உடலை உறவினர்களிடம் பெற்றுக் கொண்டனர்.

    இது குறித்து பிரபாகரனின் மனைவி ஹம்சலா கூறிய தாவது:-

    சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு எனது கணவரையும், என்னையும் அழைத்து சென்று போலீசார் உட்காரவைத்தார்கள். 5 நிமிடம் தான் உட்கார வைத்தார்கள். அதன் பிறகு எங்களை கொண்டு போய் சேந்தமங்கலம் குடியிருப்பில் உட்கார வைத்து எத்தனை பவுன் வைத்திருக்கிறாய்? எங்கு பதுக்கி வைத்திருக்கிறாய்? நகை வைத்ததாக ஒத்துக்கொள்ளுங்கள் என கூறினார்கள்.

    மேலும் என் முன்னாடி எனது கணவரை பிடித்து அடித்தார்கள். என்னையும் பைப் குழாயால் அடித்தார்கள்.

    அப்போது எனது கணவர், போலீசாரிடம் எனது மனைவியை நான் அடித்ததே கிடையாது. எனது மனைவியை அடிக்காதீங்க, விட்டு விடுங்கள் என கெஞ்சினார். அப்போது, டேய் நீ தள்ளுடா என கூறி எனது கணவரை ஷூ காலால் எட்டி உதைத்தார்கள்.

    அப்படியே 3 நாட்களும் எங்களை சித்ரவதை செய்தார்கள். ஒவ்வொரு நாளும் விடிந்தவுடன் போலீசார் வந்து விடுவார்களோ என பயத்துடனே இருந்தோம். சனிக்கிழமை, ஞாயிறு, திங்கட்கிழமை என 3 நாட்கள் சித்ரவதை அனுபவித்தோம்.

    நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு எனது கணவரை கொண்டு செல்லும்போது 3 மணி இருக்கும், அவர் அழுதார். நான் போய் விட்டு, மீண்டும் வருவேன் என எனக்கு தெரியாது. மன உளைச்சலாக இருக்கிறது என அழுதார். அவ்வளவு தான் அவர் கடைசியாக என்னிடம் பேசியது.

    என்னை கொண்டு போய் இரவு 9 மணிக்கு சேலம் அஸ்தம்பட்டி பெண்கள் சிறையில் அடைத்தனர். கணவரை ஜெயிலில் கொண்டு போய் விடும்போது செவ்வாய்க்கிழமை 4 மணி இருக்கும். புதன்கிழமை அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு ஹம்சலா கண்ணீர் மல்க கூறினார்.
    Next Story
    ×