search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொள்ளை
    X
    கொள்ளை

    ராமநாதபுரத்தில் பூட்டியிருந்த 2 வீடுகளுக்குள் புகுந்து 42 பவுன் நகை-பணம் கொள்ளை

    ராமநாதபுரத்தில் இரண்டு வீடுகளில் நகை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள கேணிக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டையை சேர்ந்தவர் அகமது அலி. இவர் மலேசியாவில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.

    மேலக்கோட்டையில் உள்ள இவரது வீட்டை வேலைக்காரர்கள் பராமரித்து வருகின்றனர். வாரத்திற்கு ஒரு நாள் வரும் அவர்கள் வீட்டை சுத்தம் செய்து விட்டு சென்று விடுவார்கள். இதன் காரணமாக பெரும்பாலான நாட்கள் அகமது அலியின் வீடு பூட்டியே கிடக்கும்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று நள்ளிரவு அங்கு வந்துள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவைத் திறந்து அதில் இருந்த 41 பவுன் நகையை திருடினர். தொடர்ந்து அந்த கும்பல் அருகில் பூட்டிக்கிடந்த சீனி முகம்மது என்பவரின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், அரை பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் 2 வீடுகளின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் கேணிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நகை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×