என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராஜேந்திர பாலாஜி
    X
    ராஜேந்திர பாலாஜி

    ராஜேந்திரபாலாஜி தலைமறைவு- முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனிடம் போலீசார் விசாரணை

    முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனை போலீசார் விசாரணைக்கு அழைத்த விவகாரம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி மீது பணம் மோசடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ 3 கோடி மோசடி புகாரில் அவர் உள்பட அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார்.

    இந்த நிலையில் அவரை பிடித்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஆனால் ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பதை இதுவரை தனிப்படை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இருப்பினும் மதுரை, திருப்பத்தூர், வேலூர், கோவை மற்றும் பிற மாநிலங்களான ஆந்திரா, கேரளா, டெல்லி பகுதிகளுக்கும் தனிப்படை போலீசார் சென்று ராஜேந்திரபாலாஜி அங்கு பதுங்கி இருக்கிறாரா? என தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அ.தி.மு.க. பிரமுகர்களின் செல்போன் உரையாடல்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். ராஜேந்திரபாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்களின் செல்போன்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் ஏழுமலை, விக்னேஸ்வரன் ஆகியோர் மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம். எஸ்.ஆர். ராஜவர்மனை விசாரணைக்காக வரும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழைத்தனர்.

    அதன்படி அவர் இன்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் டி.ஐ.ஜி. காமினி மற்றும் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனை போலீசார் விசாரணைக்கு அழைத்த விவகாரம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது.


    Next Story
    ×