search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விபத்தில் பலியான வாலிபர்களை படத்தில் காணலாம்
    X
    விபத்தில் பலியான வாலிபர்களை படத்தில் காணலாம்

    வடசேரி பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல் - 2 வாலிபர்கள் பலி

    வடசேரி பஸ் நிலையத்தில் அரசு பஸ் மோதி வாலிபர்கள் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காமேஷ் பாண்டியராஜன் (வயது 26).

    கேரளாவை சேர்ந்தவர் நிஜோமோன் (21). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்தனர். வடிவீஸ் வரம் தளவாய் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

    நேற்று இரவு மூன்று பேரும் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடைக்கு டீ அருந்துவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். தமிழ்ச்செல்வன் மோட்டர் சைக்கிள் ஓட்டினார். டீக்கடையில் டீ குடித்து விட்டு வீட்டிற்கு வருவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது தூத்துக்குடியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று வடசேரி பஸ் நிலையத்திற்குள் வந்தது. பஸ் டிரைவர் ஒரு வழிப்பாதையில் வந்ததால் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது.இதில் காமேஷ் பாண்டிய ராஜன், தமிழ்ச்செல்வன், நிஜோமோன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி காமேஷ் பாண்டியராஜன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். நிஜோமோனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு பஸ் மோதி வாலிபர்கள் 2 பேர் பலியான சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பலியான காமேஷ் பாண்டியராஜன், தமிழ்ச்செல்வனின் உடல்கள் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர். 
    Next Story
    ×