என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு: புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக்காவலர் சஸ்பெண்டு

    கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 2 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் கஞ்சா, புகையிலை, குட்கா ஒழிப்பில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தினமும் வாகனங்களில் குட்கா கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகவே உள்ளது.

    குறிப்பாக பல்வேறு குற்ற செயல்களுக்கு குட்கா பயன்படுத்துவது, கஞ்சா புகைப்பது அடிப்படையாக இருப்பதாகவும், அதனை அடியோடு ஒழிக்கவும் போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இளைஞர்களிடம் அதிகரித்து வரும் கஞ்சா பழக்கத்தை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கஞ்சாவை தடுக்க வேண்டிய போலீசாரே அதனை ஊக்குவிக்கும் செயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் சந்திரசேகர்.

    இவர் புதுக்கோட்டையில் உள்ள சில கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் திருச்சி சரகத்தில் பணியாற்றி வரும் போலீசாரின் செல்போன் எண்கள் டி.ஐ.ஜி. தலைமையிலான கண்காணிப்பு குழு சார்பில் ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

    மேலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை சரகத்தில் உள்ள போலீசார் யார், யாரிடமெல்லாம் பேசியுள்ளனர் என்பது குறித்து அந்த தனிக்குழுவினர் பட்டியல் தயாரித்து ஆய்வு நடத்துகிறார்கள்.

    அந்த வகையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரின் செல்போனை ஆய்வு செய்தபோது அவருக்கு கஞ்சா வியாபாரிகளுடனான தொடர்பு உறுதி செய்யப்பட்டது.

    இதேபோல் திருப்புனவாசல் போலீஸ் நிலைய தலைமைக்காவலர் முத்துக்குமார் என்பவரும் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் சஸ்பெண்டு செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 2 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×