search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    X
    கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் விடிய, விடிய போராட்டம்

    தேர்வில் தோல்வி என அறிவித்ததை திரும்ப பெற கோரி வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடவள்ளி:

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதன் உறுப்பு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் இளங்கலை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் அரியர் தேர்வை நடத்தியது. இதில் 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

    தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தேர்வில் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதை திரும்ப பெற கோரியும் கடந்த 5-ந்தேதி பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையால் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.

    நேற்று பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்திற்கு மாணவ, மாணவிகள் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அவர்களுடன் பல்கலைக்கழக நிர்வாகிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது தோல்வியிலேயே முடிந்தது. இதனை தொடர்ந்து 100க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலையில் தொடங்கிய போராட்டம் இரவாகியும் தொடர்ந்தது. போலீசார் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியும் மாணவர்கள் மற்றும் மாணவர் சங்கத்தினர் அங்கிருந்து செல்ல மறுத்து விட்டனர்.

    இதையடுத்து மாணவர் சங்கத்தை சேர்ந்த பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    10 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றாலும் மற்ற மாணவர்கள் தொடர்ந்து அங்கேயே போராட்டம் நடத்தினர். கலைந்து செல்ல எவ்வளவோ வலியுறுத்தியும் அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயே விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

    இதற்கிடையே கைதான மாணவர் சங்கத்தை சேர்ந்த 7 பேரை இன்று காலை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தார். இதை தொடர்ந்து மாணவர்கள் வெளியில் வந்தனர்.

    தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக மாணவர்கள் வேளாண் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×