search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெயில் வாட்டும் நிலையிலும் வடியாத வெள்ளம்
    X
    வெயில் வாட்டும் நிலையிலும் வடியாத வெள்ளம்

    சென்னையில் மழை ஓய்ந்து வெயில் வாட்டும் நிலையிலும் வடியாத வெள்ளம்

    சென்னையில் 300-க்கும் மேற்பட்ட தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வடிய வைக்கும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    சென்னையில் மழை ஓய்ந்துள்ள நிலையிலும் வெள்ளம் எப்போது வடியும்? என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.

    சென்னையில் படிப்படியாக மழை குறையும் என்கிற வானிலை மைய அறிவிப்பு சற்று ஆறுதலை அளித்துள்ள நிலையில் பல இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்துள்ளதால் மூக்கை துளைக்கும் வகையில் துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் எப்போது இந்த நிலை மாறும்? என்கிற மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சென்னை மாநகர மக்களை 3-வது முறையாக மழை வெள்ளம் முடக்கிப் போட்டது.

    கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சி அளித்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்துள்ளது.

    ஒரு சில இடங்களில் மட்டுமே நேற்று மாலையில் மழை பெய்தது. மற்றபடி அனைத்து இடங்களிலும் வெயிலின் தாக்கமே அதிகமாக இருந்தது.

    மழை நின்று வெயிலடிக்க தொடங்கியதால் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் விரைவாக வெளியேறி விடும் என்று மக்கள் நினைத்து இருந்தனர். ஆனால் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் சொட்டு, சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது.

    இதுபோன்று மெதுவாக மழைநீர் வடிவதால் இன்னும் 4 நாட்கள் வரையில் தண்ணீரில் மிதக்க வேண்டிய கட்டாயத்துக்கே பல இடங்களில் சென்னை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது என்பதை ஆய்வு செய்து மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் மழை வெள்ளம் வடியாமலேயே உள்ளது. இதனால் மழைநீரை வெளியேற்றும் பணி அதிகாரிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.

    பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள படூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், தையூர், முட்டுக்காடு, தாழம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளில் இருந்து வெளி யேறும் உபரிநீர் காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த தண்ணீர் முழுமையாக வடியாமல் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    திருப்போரூர் பகுதியில் சுமார் 40 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்துமே நிரம்பி அதிகளவில் வெளியேறிய உபரி நீர் காரணமாகவே வெள்ளம் வடிவதற்கு தாமதமாகி இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    மழை வெள்ளம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் தண்ணீர் செல்லும் பாதைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    மேற்கு மாம்பலம் பகுதிக்குட்பட்ட போஸ்டல் காலனி, மூர்த்தி தெரு, மகாதேவன் தெரு, சுப்பிரமணியன் நகர் ஆகிய இடங்களிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் நெசப்பாக்கம், திருவள்ளுவர் சாலை ஆகிய இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

    கோயம்பேடு நியூ காலனி, கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ஆபிசர் காலனி ஆகிய இடங்களிலும் தண்ணீர் வடியாமல் உள்ளது.

    இந்த பகுதிகளில் தேங்கி நிற்பது மழை தண்ணீர்தான் என்றும், இந்த தண்ணீர் வெளியேறும் மழை நீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பே தண்ணீர் தேங்குவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

    அரும்பாக்கம் பகுதியிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கூவம் கரையோரம் உள்ள பகுதிகளிலும் அடையாறு ஆற்றில் இருந்தும் வெளியேறும் உபரிநீர் தெருக்களில் புகுந்துள்ளதால் பல இடங்களில் வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளது.

    முக்கிய சாலைகளில் ராட்சத மோட்டார்களை வைத்து உடனடியாக தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். ஆனால் உட்புற சாலைகளில் கால்வாய் அடைப்புகளை சரி செய்து தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு போதுமான அளவுக்கு கைகொடுக்கவில்லை.

    இதன் காரணமாகவே இன்னும் பல தெருக்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வடிய வைக்கும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இதில் 50 சதவீதம் அளவுக்கு மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இடங்களில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள அதிகப்படியான தண்ணீரால் மணலிபுதுநகர் பகுதி மீண்டும் வெள்ளக்காடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. அந்த பகுதியில் முட்டளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வருகிறார்கள்.

    பல இடங்களில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி படகுகளில் சென்று கொடுத்து வருகிறார்கள்.

    புழல் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. தீர்த்தங்கரைபட்டு பாலாஜி நகர், புள்ளிலைன் சாந்தி காலனி, பாலாஜி கார்டன், விளாங்காடுபாக்கம் ஊரை ஒட்டியுள்ள நியூ ஸ்டார் சிட்டி மற்றும் விளாங்காடு பாக்கம் ஊருக்குள்ளும் தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது.

    பாடியநல்லூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் வழியாக ஓடி சிறுங்காவூர் ஏரிக்கு செல்லும் வழியில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கரைகளை பராமரிக்காதது ஆகிய காரணங்களால் ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடுத்த மழைக்குள்ளாவது இந்த கரைகளை பலப்படுத்தி மழை நீர் ஊருக்குள் செல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    போரூர் அய்யப்பன் தாங்கல் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக வடியாத தண்ணீரால் மக்கள் படகுகள் மூலம் மெயின் ரோட்டுக்கு வந்து செல்கிறார்கள். அடையாறு மற்றும் போரூர் ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் இந்த பகுதிக்குள் புகுந்துவிடுவதால் கடந்த பல ஆண்டுகளாகவே மழைக்காலங்களில் இந்த பகுதி மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

    அங்குள்ள ஈ.வி.பி.பிரபு அவென்யூ, தனலட்சுமி நகர், ஸ்ரீசாய் நகர், குமரன் நகர், மதுரம் நகர் உள்ளிட்ட பகுதி களில் ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    அந்த பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள்வது எப்போது? என ஏக்கத்தோடு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மவுலிவாக்கம் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாகவே இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்குவதாகவும், எனவே அதனை சரி செய்து வரும் காலங்களில் மழை தண்ணீர் புகாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் கால் வாய்களை சரியாக பராமரிக்காமல் விட்டது, ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஆகிய காரணங்களாலேயே மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள், அடுத்த ஆண்டுக்குள்ளாவது இதுபோன்ற பாதிப்புகளை சரி செய்யும் வகையில் மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும்.

    அப்போது தான் சென்னையில் மழை வெள்ளம் தேங்காமல், மழைக்காலங்களிலும் மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×