என் மலர்tooltip icon

    செய்திகள்

    புலியை பிடிக்க கூண்டு வைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்
    X
    புலியை பிடிக்க கூண்டு வைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்

    கூடலூரில் 20 இடங்களில் புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க 40 கேமராக்கள் பொருத்தம்

    யானை அகழியைக் கடந்து ஊருக்குள் வரும் பகுதிகளில் கும்கி யானைகளை நிறுத்தி காட்டு யானையை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் பணி நடந்து வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில மாதங்களாக ஒற்றை புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும், 2 மனிதர்களையும் அந்த புலி அடித்து கொன்றுள்ளது.

    தொடர்ந்து வீட்டு விலங்குகள் மற்றும் மனிதர்களை தாக்கி வரும் புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் கூட ஸ்ரீமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கன்றுகுட்டியின் உடலை வனத்துறை அலுவலகம் முன்பு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனடியாக கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி புலியை பிடிக்க கூண்டு வைப்பதாக உறுதி அளித்தனர்.

    அதன்படி நேற்று அதிகாலை மண்வயல் அடுத்த அம்பலமூலா பகுதியில் கூண்டு வைத்து அதனுள் இறந்த கன்றுகுட்டியை வைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    இதுதவிர ஸ்ரீமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் புலியின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் அந்த பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதையடுத்து ஸ்ரீமதுரை, மண்வயல், அம்பலமூலா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் புலி வந்து செல்லக் கூடியதாக 20 இடங்களை தேர்வு செய்து, அங்கு 40 தானியங்கி கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். தொடர்ந்து கேமராக்களில் பதிவாக கூடிய காட்சிகளையும், புலியின் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகின்றனர்.

    புலி நடமாட்டம் இருப்பதால் குறிப்பிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பாதுகாப்பாக இருக்கவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    புலி நடமாட்டம் மட்டுமின்றி இந்த பகுதியில் விநாயகன் என்ற யானையும் ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இதையடுத்து இந்த யானையையும் டிரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர். அப்போது விநாயகன் யானை நெல்லிக்கரை கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் இருப்பு தெரியவந்தது.

    இதையடுத்து யானை அகழியைக் கடந்து ஊருக்குள் வரும் பகுதிகளில் கும்கி யானைகளை நிறுத்தி காட்டு யானையை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் பணி நடந்து வருகிறது.

    Next Story
    ×