என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி நீர்மட்டம் 44.46 அடியாக உயர்ந்திருக்கும் காட்சி.
    X
    வீராணம் ஏரி நீர்மட்டம் 44.46 அடியாக உயர்ந்திருக்கும் காட்சி.

    வீராணம் ஏரி நீர்மட்டம் 44.46 அடியாக உயர்வு

    கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்று வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது.
    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரத்து இருக்கும்.

    வீராணம் ஏரியில் கடந்த 6 மாதமாக பராமரிப்பு பணி நடந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்று வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது.

    கீழ்அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் 600 கனஅடி நீர் மட்டும் வடவாறு வழியாக வந்தது. இதனால் நீர்மட்டம் 16 அடியிலிருந்து படிப்படியாக உயரத்தொடங்கியது. ஆனால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது.

    தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்தவிடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரதொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு இன்று 1,227 கனஅடி நீர் வடவாறு வழியாக வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,080 கனஅடி நீர் வந்தது.

    இன்றைய நிலவரப்படி வீராணம் ஏரி நீர்மட்டம் 44.46 அடி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சென்னை மாநகர் குடிநீருக்காக கூடுதலாக 27 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. நேற்று 18 கன அடியாக நீர் மட்டுமே அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று நீர் வரத்து இருந்தால் வீராணம் ஏரி விரைவில் நிரம்பிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×