search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாரிமுத்து
    X
    மாரிமுத்து

    விருதுநகரில் இன்று காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற வாலிபர் மரணம்

    தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு மாரிமுத்துவை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விருதுநகர்:

    தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. காலையிலேயே ஏராளமானோர் திரண்டு வந்து இதில் பங்கேற்றனர். ஓட்டம், உயரம், மார்பளவு உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடைபெற்றன.

    விருதுநகர் எம்.அழகாபுரியைச் சேர்ந்த சங்கர்ராஜா மகன் மாரிமுத்து (வயது 21) என்பவரும் இன்று உடல் தகுதி தேர்வில் பங்கேற்றார். அவரது உயரம், மார்பளவு பரிசோதிக்கப்பட்டது. அதன் பிறகு ஓட்டப்போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாரிமுத்து, வேகமாக ஓடியபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு மாரிமுத்துவை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற வாலிபர் மயங்கி விழுந்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×