search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் புகார்: பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரகசிய வாக்குமூலம்

    சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் புகார் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
    விழுப்புரம்:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ஒருவர் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

    இந்த பாலியல் புகார் குறித்து சிறப்பு டி.ஜி.பி.யிடம் விசாரணை நடத்த தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இதனிடையே அந்த சிறப்பு டி.ஜி.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

    மேலும் சிறப்பு டி.ஜி.பி. மீதான புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுகுறித்து விசாரணையை தொடங்கியதோடு புகாருக்குள்ளான சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த அப்போதைய செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனிடையே இந்த விவகாரத்தை சென்னை ஐகோர்ட்டு, தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. அதோடு இந்த விசாரணையை ஐகோர்ட்டு நேரடியாக கண்காணிக்கும் என்றும் விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த புகார் தொடர்பாக சாட்சிகள் பலரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நேற்று மதியம் விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு வந்து நீதிபதி பூர்ணிமா முன்பு ஆஜராகி அவரிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். 7 மணி நேரத்துக்கும் மேலாக அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த வாக்குமூலத்தை நீதிபதி பூர்ணிமா பதிவு செய்துகொண்டார். அதன் பிறகு அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி விழுப்புரம் கோர்ட்டில் இருந்து புறப்பட்டுச்சென்றார்.
    Next Story
    ×