என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    புதுக்கோட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    பெண் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பொதுமக்கள் மறியல்

    பணி செய்யாததை தட்டிக்கேட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக பெண் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம், முன்னாள் ஊராட்சி தலைவர். தற்போது அவரது மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

    நேற்றிரவு ஞானபிரகாசம் அப்பகுதியில் சென்ற போது மர்மநபர்கள் சிலர் அவரை வழிமறித்து சரமாரி தாக்கியதோடு, அரிவாளால் தலையில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ஞானபிரகாசம் சம்பட்டிவிடுதி போலீசில் புகார் செய்தார். புகாரில் வடவாளம் கிராம நிர்வாக அலுவலர் அம்பிகா தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

    வடவாளம் கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா பணிகளை சரிவர செய்யவில்லை என்று ஞானபிரகாசம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பான பிரச்சனையில் ஞானபிரகாசம் தாக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனிடையே ஞானபிரகாசத்தின் ஆதரவாளர்கள் இச்சடி புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

    தகவல் அறிந்ததும் ஆலங்குடி டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை தாசில்தார் முருகு பாண்டியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வி.ஏ.ஓ. அம்பிகா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×