search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்துக்களின் பதிவை ரத்து செய்ததற்கான உத்தரவை உதவி கலெக்டர் அளித்தபோது எடுத்த படம்.
    X
    சொத்துக்களின் பதிவை ரத்து செய்ததற்கான உத்தரவை உதவி கலெக்டர் அளித்தபோது எடுத்த படம்.

    மகன் பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவு ரத்து- உதவி கலெக்டர் அதிரடி நடவடிக்கை

    வயது முதிர்ந்த பெற்றொரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவை உதவி கலெக்டர் ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாகண்ணு (வயது 80). இவருடைய மனைவி வசந்தா (75). இவர்களுக்கு முரளி, சங்கர், பிரபு என்ற 3 மகன்களும் தமிழ்ச்செல்வி, பத்மா என்ற 2 மகள்களும் உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகன் முரளி இறந்து விட்டார். 2-வது மகனிடம் ராஜாக்கண்ணும், வசந்தாவும் வசித்து வந்தனர். 3-வது மகன் பிரபு பெங்களூருவில் கார் டிரைவராக இருந்தார்.

    2-வது மகன் சங்கர் 2017-ம் ஆண்டு இறந்து விட்டார். இதையடுத்து ராஜாக்கண்ணு பெங்களூருவில் உள்ள இளைய மகன் பிரபுவை பேரணாம்பட்டுக்கு வந்து விடுமாறும், வயது முதிர்ந்த எங்களை பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து பேரணாம்பட்டு கெங்கையம்மன் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 2 வீடுகளை இளைய மகன் பிரபுவின் பெயரில் பெற்றோர் எழுதி வைத்தனர்.

    சில மாதங்கள் பெற்றோரை நன்றாக கவனித்து வந்த பிரபு அதன்பிறகு சரியாக பராமரிக்காமல் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. வசந்தாவும் நோயால் அவதிப்பட்டு வந்தார். வயது முதிர்ந்த தம்பதியர் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

    வயது முதிர்ந்த தம்பதியர் தங்களுக்கு ஏற்பட்ட நிலைமைப் பற்றி வெளியூரில் உள்ள தங்களின் மகள்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் வந்து பிரபுவுக்கு அறிவுரை வழங்கினர். ஆனால் சகோதரிகளின் பேச்சை அவர் கேட்கவில்லை, பெற்றோரையும் அவர் சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி ராஜாக்கண்ணு, வசந்தா தம்பதியர் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்களை மகன் பிரபு கவனிக்கவில்லை, கொடுமைப்படுத்துகிறார், பிரபு மீது எழுதி வைத்த சொத்துக்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தனர்.

    முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007-ன் படி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் விசாரணை நடத்தினார். அதில் வயது முதிர்ந்த பெற்றோரை பிரபு பராமரிக்காமல் துன்புறுத்தி வந்தது தெரிந்தது.

    உடல்நலப் பாதிப்போடு ஒரு ஆட்டோவில் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ராஜாக்கண்ணு, வசந்தா தம்பதியரிடம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், பிரபு பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவை ரத்து செய்ததற்கான உத்தரவை அளித்தார். அந்த உத்தரவை வயது முதிர்ந்த தம்பதியர் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர்.
    Next Story
    ×