என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி மண்பாண்டம் செய்வதையும், விற்பனையாகாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மண் சட்டிகளையும் படத்தில் காணலாம்
    X
    தொழிலாளி மண்பாண்டம் செய்வதையும், விற்பனையாகாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மண் சட்டிகளையும் படத்தில் காணலாம்

    மண்பாண்ட வியாபாரம் முடங்கியதால் தொழிலாளர்கள் வருமானமின்றி தவிப்பு

    கொரோனா ஊரடங்கால் மண்பாண்ட வியாபாரம் முடங்கியதால் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
    ஆதனக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண் பாண்டம் செய்யும் தொழிலை குலத்தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் குளத்தில் இருந்து ரூ.3 ஆயிரம் செலவில் லாரியில் மண் கொண்டு வந்து, அவற்றை மண்பாண்டம் செய்வதற்கு ஏற்றவாறு கொண்டு வந்து, சிறிய மின் மோட்டார் மூலம் செய்யப்பட்டுள்ள திருவையில் வைத்து அவர்களுக்கு தேவைப்படும் வடிவங்களுக்கு ஏற்றவாறு மண்பாண்டங்கள் செய்கின்றனர்.

    இதில் அகல்விளக்கு, சட்டிகள், 5 முக விளக்குகள், கோபுர விளக்குகள், டம்ளர், ஜாடி, கலையம், உண்டியல், பணியாரசட்டி, பல்வேறு வடிவங்களில் குழம்பு சட்டிகள், மூடிகள் சிறிய மண் குடம் முதல் 20 லிட்டர் பிடிக்கும் அளவிற்கான பானை வரை அனைத்து வகையான மண்பாண்டங்களை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதிக்கு காரைக்குடி, அறந்தாங்கி, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து, முன்பணம் கொடுத்து மண்பாண்டங்கள் செய்யச்சொல்லி வாங்கிச் செல்வதுண்டு. பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பல்வேறு வகையான மண்பாண்டங்களை வாங்கி செல்வார்கள். சமீபகாலமாக பொதுமக்களிடம் மண்பாண்டங்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் மூலம் அவர்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வந்தது.

    இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு பாதிப்பால் மண்பாண்ட வியாபாரம் முடங்கிப்போனது. முன்பு ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ.30 ஆயிரம் வரை வருமானம் கிடைத்த இத்தொழிலில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வராத நிலையில், மண்பாண்ட தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந்த 50 குடும்பங்களுக்கும், தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கிய ரூ.2 ஆயிரம், மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தும் கூட கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.

    மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் இந்த தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் தண்ணீர் எடுத்து மண்பாண்ட தொழிலை செய்வதற்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி அளிக்க மாவட்ட நிர்வாகம் வங்கிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×