search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவர்னர் கிரண்பேடி
    X
    புதுவை கவர்னர் கிரண்பேடி

    பொதுமக்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்- கவர்னர் கிரண்பேடி

    பொதுமக்கள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலிலை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் ஒரு முக கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை எவ்வாறு விதிகளை மீறி செயல்பட்டது என்று பாருங்கள். அந்த தொழிற்சாலையில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான தொழிலாளர்களை பணிக்கு வரவழைத்து உள்ளனர். அவர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்காமல் கொரோனா பரவுவதற்கு வழிவகை செய்துள்ளது.

    இதன் விளைவு மொத்த புதுச்சேரிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தற்போது அந்த தொழிற்சாலை மூடப்பட்டு பேரழிவு மேலாண்மை சட்டம், தொழிலாளர்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலை உரிமையாளர்கள், மேலாளர்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு வாழ்க்கை எந்த அளவுக்கு இன்றியமையாததோ அதேபோல் வாழ்வாதாரமும் இன்றியமையாததாகும். தயவு செய்து கவனமாக செயல்படவும்.

    உங்களை பாதுகாப்பதன் வழியாக மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சுகாதாரத்துடன் செயல்படுவது போன்றவற்றை நம்முடைய வாழ்க்கையின் அன்றாட பழக்க வழக்கமாக கொள்ள வேண்டும். இதை அச்சத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டாம். அதற்கு மாறாக இதை செயல்படுத்துவதால் சுய பாதுகாப்புடன் கொரோனா பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் பின்பற்றவும்.

    பொதுமக்கள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவேற்றம் செய்து கொள்ளவும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உங்கள் அருகில் இருந்தால் இந்த செயலியின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பரிசோதனையும், சிகிச்சை முறையும் மிகவும் விலை உயர்ந்தது ஆகும். இது உங்களுடைய வாழ்வாதாரத்திற்கானது. உங்களுடைய அலட்சியத்தால் உங்களையும் இழந்து, மேலும் பலர் இறக்க வழிவகை செய்துவிடாதீர்கள். வேறு வழி இல்லை. எனவே இந்த கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் முறைகளில் கவனம் செலுத்தி உங்களையும், உங்களுடைய வாழ்வாதாரத்தையும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×