என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரங்குகளுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி
    X
    குரங்குகளுக்கு உணவளிக்கும் கூலித்தொழிலாளி

    குரங்குகளுக்கு ஓராண்டாக உணவு அளித்து வரும் கூலித்தொழிலாளி

    தனக்கு இயலாத நிலையிலும் இடைவிடாத மனிதநேயத்துடன் குரங்குகளுக்கு உணவு வழங்கி வரும் கூலித்தொழிலாளியின் பணியை அந்த பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் வேங்கூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரங்களில் புளிய மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த புளிய மரங்களில் நிறைய குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகள் உணவு தேடி சாலையில் அங்கும், இங்கும் அலைவதையும், அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் ஏதாவது கிடைக்குமா என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதையும் கல்லணை அருகே உள்ள வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நடராஜன்(59) பார்த்தார்.

    அந்த குரங்குகளுக்கு ஏதாவது உணவு வழங்க வேண்டும் என்று அவர் எண்ணினார். தனது எண்ணத்தை தனது மனைவியிடம் தெரிவித்தார் நடராஜன். இருவரும் கலந்து ஆலோசித்தனர். கணவரின் எண்ணத்தை அறிந்த அவரது மனைவியும் அதற்கு ஒப்புக் கொண்டார். தினமும் ஒரு எவர்சில்வர் வாளியில் தயிர் சாதம், சாம்பார் சாதம், புளி சாதம் என தங்கள் வீட்டில் கிடைப்பதை வைத்து சமையல் செய்து இங்கு எடுத்து வருகிறார், நடராஜன். உணவுடன் சாலைக்கு வந்து குரங்குகளை நடராஜன் அழைத்ததும் அவைகள் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்து சாலையோரத்தில் வைக்கும் உணவை உண்ணும் குரங்குகள் மீண்டும் மரங்களில் ஏறிச்சென்று விடுகின்றன.

    இது ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் நடப்பது அல்ல. கூலித்தொழிலாளியான நடராஜன் தான், கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைத்து வரும் வருவாயை கொண்டு கடந்த ஒரு ஆண்டாக இந்த உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு இயலாத நிலையிலும் இடைவிடாத மனிதநேயத்துடன் குரங்குகளுக்கு உணவு வழங்கி வரும் நடராஜனின் பணியை அந்த பகுதி மக்கள் பாராட்டுகின்றனர். 
    Next Story
    ×