என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    10-ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

    குளிக்கும் போது திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதுதொடர்பாக கட்டிட தொழிலாளி உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    வேலூர்:

    வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் பென்னாத்தூர் அரசு பள்ளியில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் மேற்கூரை இல்லாத கழிப்பறையில் குளித்துள்ளார். இதனை அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பூனை கண்ணன் என்கிற ஆகாஷ் (வயது 22) மற்றும் பிளஸ்-2 முடித்துள்ள 17 வயது சிறுவர்கள் 2 பேர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் 3 பேரும் இதுகுறித்து மாணவியிடம் தெரிவித்து தனியாக வரும்படி தொல்லை கொடுத்துள்ளனர். அவர்களின் செல்போனில், குளிக்கும் வீடியோ இருப்பதை மாணவி நம்ப மறுத்துள்ளார். இதையடுத்து 3 பேரும் மாணவியின் உறவினரின் செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு அந்த வீடியோவை அனுப்பி, அதை உடனடியாக பார்க்கும்படி தெரிவித்து உள்ளனர். அதனை கண்டு திடுக்கிட்ட மாணவி உடனடியாக அந்த வீடியோவை அழித்து உள்ளார். மேலும் அவர், செல்போனில் வைத்துள்ள வீடியோவை அழித்து விடும்படி 3 பேரிடமும் கெஞ்சி உள்ளார்.

    அப்போது அவர்கள், மாணவியை தாங்கள் கூறும் இடத்துக்கு தனியாக வரும்படியும், வீடியோ குறித்து யாரிடம் தெரிவிக்க கூடாது என்றும் கூறிஉள்ளனர். மேலும் தனியாக வராவிட்டாலோ, இதுகுறித்து பிறரிடம் தெரிவித்தாலோ குளிக்கும் வீடியோவை வாட்ஸ்-அப், யு-டியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

    அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து வலியால் மாணவி அலறி துடித்தார். அவரது அலறலை கேட்ட உறவினர்கள் அங்கு வந்து அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்தார். மேலும் இதுதொடர்பாக சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், குளிக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக 3 பேர் மிரட்டியதால் தீக்குளித்தாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.

    அதைத்தொடர்ந்து போலீசார் ஆகாஷ் உள்பட 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×