என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஏர் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வங்கி அதிகாரி சென்னை அழைத்து வரப்பட்ட காட்சி.
    X
    தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஏர் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வங்கி அதிகாரி சென்னை அழைத்து வரப்பட்ட காட்சி.

    தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிகிச்சைக்காக ஏர்ஆம்புலன்சில் 30 மணி நேரம் பறந்து சென்னை வந்த வங்கி அதிகாரி

    தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிகிச்சைக்காக 30 மணிநேரம் ஏர்ஆம்புலன்சில் பறந்து சென்னை வந்த வங்கி அதிகாரி, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    ஆலந்தூர்:

    ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் விஜய்யாசம்(வயது 43). இவர், தென் ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில தினங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்தியாவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்காவில் குடும்பத்துடன் உள்ள விஜய்யாசம், இந்தியாவுக்கு வர விரும்பினார்.

    பின்னர் வங்கி அதிகாரிகள் முயற்சியால் சிகிச்சைக்காக அவரை இந்தியாவுக்கு ஏர்ஆம்புலன்ஸ் விமானத்தில் அழைத்து வர மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள நிறுவனத்தின் மூலமாக ஏர்ஆம்புலன்ஸ் தென் ஆப்பிரிக்காவுக்கு நேற்று முன்தினம் சென்றது.

    அங்கிருந்து வங்கி அதிகாரி விஜய்யாசம் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் புறப்பட்டது. அவர்களுடன் ஒரு டாக்டர், மருத்துவ உதவியாளர் ஆகியோருடன் 2 விமானிகள் ஏர்ஆம்புலன்சை இயக்கினார்கள்.

    தென் ஆப்பிரிக்காவில் இருந்து மொரிசியஸ் நாட்டுக்கு சென்றது. அங்கு தேவையான எரிபொருளை ஏற்றிக்கொண்டு மாலத்தீவு வழியாக சென்னைக்கு நேற்று மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வங்கி அதிகாரி சென்னையில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    ஏர்ஆம்புலன்ஸ், தென் ஆப்பிரிக்காவில் இருந்து சென்னைக்கு 21 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 30 மணி நேரம் பறந்து 7 நாடுகள் வழியாக வந்தது. நீண்ட தூர பயணமாக ஏர்ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
    Next Story
    ×