என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூரில் தடை உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை

    வேலூரில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் வந்தவர்களை போலீசார் 1 மணி நேரம் சாலையில் நிற்க வைத்து நூதன தண்டனை அளித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் யாரேனும் நடமாடுகிறார்களா? என்பதை கண்காணிக்கவும், தடை உத்தரவை அமல்படுத்தவும் 52 போலீஸ் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. தடை உத்தரவை மீறி பொதுமக்கள் பலர் வழக்கம் போல் சாலைகளில் சுற்றி திரிந்தனர்.

    சிலர் தடை உத்தரவு நேரத்தில் நகரம், முக்கிய சாலைகள் எவ்வாறு உள்ளது? என்பதை காண பைக்குகளில் சுற்றித்திரிந்தனர். போலீசார் முக்கிய சாலைகளில் நின்று பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி கூறினார்கள். ஆனால் சிலர் தேவையில்லாமல் தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் சொந்த ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்களில் 86 பேர் கைது செய்யப்பட்டனர். 80 பைக்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன.

    இன்று காலை 9 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்றவர்களை போலீசார் கண்டு கொள்ளவில்லை. கடைகளில் சமூக இடைவெளியுடன் பொருட்கள் வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி பொதுமக்கள் காய்கறி, பால் வாங்கி சென்றனர்.

    காலை 9 மணிக்கு மேல் தடையை மீறி வாகனங்களில் வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

    வேலூர் அண்ணாசாலை, திருப்பதி தேவஸ்தானம் அருகே வாகனங்களில் வந்தவர்களை 1 மணி நேரம் சாலையில் நிற்க வைத்து நூதன தண்டனை அளித்தனர். மேலும் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×