search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா ரோந்து வாகனம்.
    X
    அம்மா ரோந்து வாகனம்.

    ரவுடி மீது காதல்- பள்ளி மாணவிக்கு அறிவுரை வழங்கிய பெண் போலீசார்

    திருவேற்காட்டில் ரவுடி மீது காதல் கொண்ட பள்ளி மாணவிக்கு அம்மா ரோந்து வாகனத்தில் சென்ற பெண் போலீசார் அறிவுரை வழங்கினர்.
    சென்னை:

    பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அம்மா ரோந்து வாகன சேவையை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தில் சென்னை உள்பட 8 பெரு நகரங்களை தேர்வு செய்து பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் ரூ.7½ கோடி செலவில் 40 கார்கள் இதற்காக சென்னை பெண் போலீசுக்கு வழங்கப்பட்டது.

    துணை ஆணையாளர் ஜெயலட்சுமியின் கீழ் 4 கூடுதல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார், நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இப்பிரிவு சென்னையிலுள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண். 1091 மற்றும் குழந்தைகள் உதவி மைய இலவச தொலைபேசி எண். 1098 ஆகிய எண்களுக்கு வரும் அழைப்புகளுக்கு, தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் அம்மா ரோந்து காவல் வாகனங்களில் போலீசார் சென்று உடனுக்குடன் பிரச்சனைகளை தீர்த்து வருகிறார்கள்.

    அம்மா ரோந்து வாகனங்கள் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 26-ந்தேதி முதல் இப்போது வரை சுமார் 3200 அழைப்புகள் வந்துள்ளன.

    இந்த நிலையில் திருவேற்காட்டை சேர்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவனை காதலித்து உள்ளார். கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அவனுடன் பழக கூடாது என்று அந்த பெண்ணின் தந்தை கண்டித்துள்ளார். ஆனால் மாணவி தந்தையின் பேச்சை கேட்கவில்லை.

    இதையடுத்து தந்தை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனடியாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு போலீசாரை அனுப்பி வைத்து மாணவிக்கு அறிவுரை கூறினார். ரவுடியையும் போலீசார் வரவழைத்து எச்சரித்து அனுப்பினார்கள். இது போன்று கடந்த 26-ந்தேதியில் இருந்து பல்வேறு சிறுமிகளும், இளம்பெண்களும் அம்மா ரோந்து வாகனத்தால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சென்னை பெருநகரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் விடுதிகள், சிறுவர் இல்லங்கள், குடிசைப் பகுதிகள், பேருந்து முனையங்கள், ரெயில் நிலையங்கள், பொழுது போக்கு மையங்கள், வணிக வளாகங்கள், அங்காடிகள், வழிபாட்டுத் தலங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், மருத்துவமனைகள், பூங்காக்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகின்றன. இது வரவேற்பை பெற்றுள்ளது.
    Next Story
    ×