search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைத்தறி நெசவு மூலம் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் - உலக தமிழ் மாநாட்டில் இடம் பெறுமா?
    X

    கைத்தறி நெசவு மூலம் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் - உலக தமிழ் மாநாட்டில் இடம் பெறுமா?

    கைத்தறி நெசவு மூலம் வடிவமைக்கப்பட்ட திருக்குறளை உலக தமிழ்மாநாட்டில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    கரூர்:

    கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட கரூர் நகரமானது கைத்தறி நகரம் என்கிற சிறப்பு பெற்றதாகும். முன்பு கரூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு கைத்தறி தொழில் தான் கைகொடுத்தது என்றே சொல்லலாம். அந்த வகையில் அப்போது வீட்டுக்கு ஒரு தறியை வைத்து கொண்டு, ராட்டையில் நூல் நூற்று போர்வை, துண்டு, திரைச்சீலை, மெத்தை விரிப்பு உள்ளிட்டவற்றை நெசவு செய்து பிழைப்பு நடத்தினர்.

    ஆனால் தற்போது கைத்தறி நெசவுக்கு ஆட்கள் பற்றாக்குறை, நூல் உள்பட மூலதன பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றால் கைத்தறிநெசவில் போதிய வருமானம் கிடைக்காமல் தொழில் நலிவடைந்து விட்டதால் பலரும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட்டவற்றுக்கு வேலைக்கு சென்று விட்டனர். எனினும் கரூரில் கைத்தொழிலை விட்டு விடக்கூடாது என்கிற வைராக்கியத்தில் தொடர்ச்சியாக சிலர் கைத்தறி நெசவில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது.

    இந்தநிலையில் பாரம்பரிய கைத்தறி தொழிலை மீட்டெடுத்து, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்கிற முனைப்புடன் கரூர் வெங்கமேட்டை சேர்ந்த கைத்தறி நெசவாளர் கே.ஏ.சின்னுசாமி (வயது 73) கைத்தறி நெசவில் பல்வேறு புதுமைகளை புகுத்தினார். அதில் கைத்தறி மூலம் திருக்குறளை நெசவு செய்து துணியில் வடிவமைத்தார். 1,330 குறள்களையும் எழுதும் நோக்கில் செயல்பட்ட அவர், கடந்த ஆண்டு டிசம்பர் 13-ல் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு அங்கம்மாள் (68) என்கிற மனைவியும், பாஸ்கர் (52), ரவி (49), சதாசிவம் ஆகிய 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் குடும்ப வறுமை சூழல் உள்ளிட்டவற்றின் காரணமாக ஒரு மகளுக்கு மட்டும் தான் திருமணமாகியுள்ளது. மற்றவர்கள் சின்னுசாமியின் மறைவுக்கு பிறகு வறுமையில் வாடி வருகின்றனர். எனினும் தந்தை விட்டு சென்ற பணியை விட மனமில்லாமல் தொடர்ந்து வீட்டில் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து சின்னுசாமியின் மகன் பாஸ்கரிடம் கேட்டபோது கூறுகையில், நான் சிறுவனாக இருந்தபோதே குடும்பத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டம் ஏற்பட்டது. காமராஜர் ஆட்சியில் மதியஉணவு வழங்கியதால் 3-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் எனது தந்தைக்கு உதவியாக கைத்தொழிலில் ஈடுபட்டு அதனை கற்று கொண்டேன். தற்போது அவரது மறைவுக்கு பின்னரும் விடாப்பிடியாக கைத்தறி தொழிலை விட்டு விடாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எனது பிறந்த நாளின் போதே, எனது தந்தை மறைந்து விட்டது வேதனை குறியது என கூறினார்.

    எனினும், கைத்தறிக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக துணியில் சின்னுசாமியால் வடிவமைக்கப்பட்ட திருக்குறளை வருகிற ஜூலை மாதம் சிகாகோவில் நடைபெறவுள்ள 10-வது உலகத் தமிழ் மாநாட்டில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் நலிவடைந்து வரும் கைத்தறி தொழிலை மீட்கவும் அதன் புத்துணர்ச்சிக்கும் அரசு உதவி செய்ய வேண்டும். மேலும் கைத்தறியில் சாதனை படைத்தும் வறுமையில் வாடும் சின்னுசாமியின் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்ட அரசு முன்வர வேண்டும். அவர்களுக்கு உதவித்தொகை வழங்கி கைத்தறி தொழிலை தொடர்ச்சியாக மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

    அரசு அலுவலகங்களில் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட உருவபடங்கள், லட்சினை, விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை வைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில் மாணவர்களின் கூடுதல் திறனை வளர்க்கும் பொருட்டு தொலைநோக்கு சிந்தனையுடன் கைத்தறி வகுப்புகள் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டதை அவ்வளவு எளிதில் நாம் மறந்து விட முடியாது. இந்த கைத்தறி வகுப்புகள் பலரது வாழ்வுக்கு கைகொடுத்தது. அந்த நிலை தற்போது மாறிவிட்டது. எனவே மீண்டும் பள்ளிகளில் கைத்தறிநெசவு, கூடை பின்னுதல் உள்ளிட்ட கைத்தொழில் வகுப்புகளை நடத்த வேண்டும் என கரூர் கைத்தறி நெசவாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×