search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரெயில்கள்  - 3 பேர் பணியிடை நீக்கம்
    X

    ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரெயில்கள் - 3 பேர் பணியிடை நீக்கம்

    திருமங்கலம் ரெயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரெயில்கள் மோதும் சூழல் ஏற்பட்டதாக கூறப்படும் புகாரின் பேரில் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். #TirumangalamStation
    மதுரை:

    மதுரையில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு செங்கோட்டை பயணிகள் ரெயில் புறப்பட்டது. 5.40 மணிக்கு திருமங்கலம் சென்றடைந்த ரெயில், சிக்னல் கிடைக்காததால் அங்கேயே நிறுத்தப்பட்டது.

    புறப்பட்ட 10 நிமிடத்துக்குள்ளேயே ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். திருமங்கலம் ரெயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது.



    இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஒப்புதல் அளித்தபின் பயணிகள் ரெயில் புறப்பட்டது.

    200 மீட்டர் தூரம்கூட சென்றிருக்காத நிலையில் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு ரெயில் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது.

    ரெயில் நிலையம் என்பதால் இரண்டு ரெயில்களும் மிகக்குறைந்த வேகத்தில் வந்துகொண்டிருந்தது. இதனால் ரெயில் நிலையத்தில் இருந்தவர்களும், பயணிகளும் பீதியடைந்து கூச்சலிட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இரண்டு என்ஜின் டிரைவர்களும் உடனே ரெயில்களை நிறுத்தினர்.

    டிரைவர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன்பின்னர் மதுரை -செங்கோட்டை பயணிகள் ரெயில் மீண்டும் ரெயில் நிலையத்துக்கு வந்து மற்றொரு தண்டவாளத்துக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து செங்கோட்டை- மதுரை ரெயில் புறப்பட்டுச் சென்றது.

    திருமங்கலத்துக்கு 5.40 மணிக்கு வந்த மதுரை- செங்கோட்டை பயணிகள் ரெயில் 2 மணி நேரம் தாமதத்துக்கு பின் 7.40-க்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பெண்களும், முதியோர்களும் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் மதுரை - செங்கோட்டை இருமார்க்க ரெயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்து மோதும் சூழல் ஏற்பட்டதாக கூறப்படும் புகாரின் பேரில், மதுரை கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் பீம்சிங் மீனா, திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயகுமார், கண்ட்ரோலர் முருகானந்தம் ஆகியோரை பணியிடை நீக்கம்  செய்து ரெயில்வே உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். #TirumangalamStation
    Next Story
    ×