search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்எண்ணை ஏற்றி சென்ற டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த லாரியை படத்தில் காணலாம்.
    X
    மண்எண்ணை ஏற்றி சென்ற டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த லாரியை படத்தில் காணலாம்.

    மேச்சேரி அருகே மண்எண்ணை ஏற்றி சென்ற டேங்கர் லாரி நடு ரோட்டில் கவிழ்ந்தது

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மண்எண்ணை ஏற்றி சென்ற டேங்கர் லாரி இன்று காலை நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    மேச்சேரி:

    சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ஒயிட் மண்எண்ணை ஏற்றிய ஒரு டேங்கர் லாரி நேற்றிரவு புறப்பட்டது.

    இந்த லாரியை கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ராஜா (50) என்பவர் ஓட்டினர். ஒயிட் மண்எண்ணையை வாங்கி செல்லும் எர்ணாகுளம் மாட்டுகுழா பகுதியை சேர்ந்த நாசர் மற்றும் மற்றொரு டிரைவரும் அந்த லாரியில் அமர்ந்து இருந்தனர்.

    இந்த ஒயிட் மண்எண்ணை பெயிண்டில் கலப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த லாரி இன்று காலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் மேச்சேரி-மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி குள்ளமுடையானூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது நிலை தடுமாறிய லாரி தாறு மாறாக ஓடியது. பின்னர் சாலையோரமாக கிடந்த கல்லில் ஏறிய லாரி நடு ரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த டிரைவர்கள் உள்பட 3 பேரும் லேசான காயத்துடன் தப்பினர். லாரியில் இருந்த ஒயிட் மண்எண்ணை சாலையில் ஆறாக ஓடியது. மேலும் லாரி கவிழ்ந்த இடத்தின் அருகே பெட்ரோல் பங்கும் இருந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    உடனே அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தீயணைப்பு நிலையத்திற்கும், மேச்சேரி போலீஸ் நிலையத்திற்கும் அந்த பகுதியினர் தகவல் தெரிவித்தனர். மேட்டூரில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    உடனே அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் வாகனங்கள் செல்லாத வகையில் சாலையின் இருபக்கமும் கயிறு கட்டி தடை ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் சுற்றி சென்றன.

    இதற்கிடையே தீ விபத்து ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு டேங்கர் லாரியை தூக்கி நிறுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசாரும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×