என் மலர்
செய்திகள்
காதலுக்கு எதிர்ப்பால் திருச்சி பெண் போலீஸ் தற்கொலை- காதலனும் விபத்தில் சிக்கிய பரிதாபம்
கே.கே.நகர்:
திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றிய காவலர் முத்து, பெண்கள் ஜெயில் வார்டர் செந்தமிழ் செல்வி ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று மேலும் ஒரு பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை எடமலைப் பட்டிபுதூர் கிராப்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் காவலர் ராஜலட்சுமி (வயது 24).
இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் வேலை பார்த்து வந்தார். பெண் போலீஸ் ராஜலட்சுமி திருச்சி அருகே பெட்டவாய்த்தலையை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் சிவக்குமார் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் இருவரின் வீடுகளிலும் அவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இதனால் ராஜலட்சுமி மன முடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே நேற்று இரவு சிவக்குமாரும், ராஜலட்சுமியும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதில் அவர்களுக்கிடையே பிரச்சினை எழுந்துள்ளது.
அப்போது கோபத்தில் ராஜலட்சுமி செல்போன் இணைப்பினை துண்டித்துள்ளார். இன்று காலை சிவக்குமார், ராஜலட்சுமியின் செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் செல்போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் கிராப்பட்டி காவலர் குடியிருப்பிற்கு வந்துள்ளார். அப்போது ராஜலட்சுமி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அவர் அரளி விதையை அரைத்து குடித்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து சிவக்குமார் அங்கிருந்த தனது பைக்கில் பெட்டவாய்த்த லைக்கு திரும்பியுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே சாலை விபத்தில் சிக்கினார். இதில் காயமடைந்த அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
திருச்சி காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் ராஜலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ராஜலட்சுமி தற்போது கர்ப்பமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து அறிந்த கே.கே.நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.