என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிடம் ரூ. 2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் - கோவை சிறையில் அடைப்பு
    X

    விவசாயிடம் ரூ. 2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் - கோவை சிறையில் அடைப்பு

    உடுமலை அருகே ரூ. 2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி அருகில் உள்ள ஆலமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி.

    இவர் தனது மாமனார் திருமலைச்சாமி விவசாய நிலத்திற்கு சொட்டு நீர் பாசனத்திற்காக சிறு, குறு விவசாயி சான்றிதழ் பெற வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த குமாரை (37) அணுகி உள்ளார்.

    அதற்கு அவர் சிறு, குறு அட்டை வழங்க ரூ. 2,500 லஞ்சம் கேட்டு உள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வராஜ் இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழங்கிய ஆலோசனைபடி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த குமாரிடம் விவசாயி செல்வராஜ் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த குமார் கோவை ஒத்தக்கால் மண்டபம் பிரிமியர் நகரை சேர்ந்தவர்.

    இவர் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார். முதலில் தாராபுரம் தாலுகா முத்திய பட்டியில் பணியாற்றினார்.

    கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி தான் வடுகபாளையத்தில் பொறுப்பேற்றார். இரு கிராமத்தில் மட்டுமே பணியாற்றிய ஆனந்த குமார் இளம் வயதிலேயே லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

    இதே போல் லஞ்சம் வாங்கும் மற்ற வருவாய் துறை அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.

    Next Story
    ×