search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்திருட்டில் 50 சதவீத தொகையை மட்டும் வசூலித்து குற்றவாளியுடன் சமரசம் செய்வதா?- ஐகோர்ட் சரமாரி கேள்வி
    X

    மின்திருட்டில் 50 சதவீத தொகையை மட்டும் வசூலித்து குற்றவாளியுடன் சமரசம் செய்வதா?- ஐகோர்ட் சரமாரி கேள்வி

    மின்திருட்டில் 50 சதவீத தொகையை மட்டும் வசூலித்துவிட்டு, குற்றவாளியுடன் சமரசம் செய்துகொள்ளும் நடைமுறை தொடர்பாக ஐகோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. #PowerTheftCase #MadrasHighCourt
    சென்னை:

    சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மின்சார திருட்டு தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மின்சார திருட்டு தொகையில் 50 சதவீதத்தை வசூலித்து விட்டு, அந்த பிரச்சனை முடித்து வைக்கப்படுவதாக மின்சாரத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார். இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

    பின்னர் நீதிபதி, ‘மின்சார திருட்டுக்கும், தங்கநகை உள்ளிட்ட வேறு பொருட்களை திருடுவதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. திருடுவது என்பது குற்றம். அந்த திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்யாமல், எப்படி அந்த குற்றத்தை முடித்து வைக்க முடியும்? மின்சார திருட்டை யார் கவனிக்கிறது? திருடியவர்களிடம் இருந்து எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மின்சாரத்துறை வக்கீல், ‘உதவி செயற்பொறியாளர் மின்சார திருட்டை கணக்கிட்டு, திருடியவர்களிடம் இருந்து 50 சதவீதம் தொகையை வசூலித்து விட்டு, பிரச்சனையை முடித்து வைப்பார்’ என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி, ‘ஒரு தொழிற்சாலை ரூ.5 கோடி மதிப்புள்ள மின்சாரத்தை திருடியுள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.2.50 கோடியை வாங்கிக் கொண்டு மின்சார திருட்டு பிரச்சனையை கை விட்டு விடுவீர்களா?. மின்சார திருட்டு குறித்து போலீசில் புகார் செய்ய மாட்டீர்களா?’ என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மின்சாரத்துறை வக்கீல், ‘போலீசில் புகார் செய்வது இல்லை. மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளரே சமரசம் செய்து வைத்து விடுவார்’ என்றார்.

    ‘அப்புறம் எப்படி மின்சாரத் துறை லாபகரமாக செயல்படும்? போக்குவரத்து துறை, மின்சாரத்துறை எல்லாம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று சொல்வதற்கு இதுபோன்றவைதான் காரணங்கள். உதவி செயற்பொறியாளர் திருட்டு பிரச்சனைக்கு சமரசம் செய்யும் அதிகாரம் கொண்டவர் என்றால், இதுபோன்ற நடவடிக்கையில் ஊழலுக்கு வழிவகை செய்யாதா? ஒரு திருட்டு என்றால், அதுகுறித்து போலீசில்தான் புகார் செய்யவேண்டும். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். திருட்டு குற்றத்தை சமரசம் செய்ய முடியாது. அப்படி இருக்கும்போது, மின்சார திருட்டில் பாதி தொகையை வசூலித்து விட்டு, எப்படி குற்றவாளியுடன் அதிகாரிகள் சமரசமாக செல்ல முடியும்?’ என்று நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து, ‘இந்த கேள்விகளுக்கு எல்லாம் மின்சாரத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். குற்ற வழக்குகள் குறித்து தமிழக சிறப்பு அரசு பிளீடர் தம்பித்துரை நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், அவரை இந்த வழக்கில் ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக நியமிக்கிறேன். இந்த வழக்கு விசாரணையை வருகிற 28ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். #PowerTheftCase #MadrasHighCourt
    Next Story
    ×