search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி
    X

    நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி

    கும்பகோணம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி தனது வயிற்றில் மதுபாட்டிலால் குத்தியதால் காயம் அடைந்தார்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோணுலாம்பள்ளம் அடுத்த திட்டசேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி கொடியரசி (24). இவர்களுக்கு சிபாசினி (5), சந்தித் குமார் (3) ரேஷ்மா (1½) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    செந்தில்குமாரின் எதிர் வீட்டில் பார்த்திபன் (26) என்ற வாலிபர் தனது தாய் லட்சுமியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் பார்த்திபனுக்கும், கொடியரசிக்கும் இடையே பழக்கம் காரணமாக இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவர் செந்தில்குமாருக்கும், கொடியரசிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் புத்தாண்டு அன்று பார்த்திபன், தனது செல்போனில் கொடியரசிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பேசியதாக கூறப்படுகிறது. இதை பற்றி கேள்விப்பட்ட செந்தில்குமார் , மனைவியின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செந்தில்குமாரை கண்டித்து கொடியரசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் மனைவி மீது கடும் ஆத்திரத்தில் செந்தில்குமார் இருந்து வந்தார். தொடர்ந்து நிம்மதியில்லாமல் தவித்து வந்த அவர் , மனைவியை கொன்று விட முடிவு செய்தார். இன்று அதிகாலையில் செந்தில்குமார் கண் விழித்தார். அப்போது தூங்கி கொண்டிருந்த கொடியரசியை பார்த்து ஆத்திரம் அடைந்தார். உடனே வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கொடியரசி கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியதால் அவர் அலறி துடித்தார்.


    இதனால் மனைவி இறந்து விட்டால் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களே என்று செந்தில்குமார் பயந்தார். உடனே அவர் மதுபாட்டிலால் தனது வயிற்றை கிழித்தார். இதில் அவரது குடல் சரிந்து ரத்தம் வெளியேறியது.

    இதற்கிடையே கொடியரசின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரையும், செந்தில்குமாரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் செந்தில்குமார் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி திருப்பனந்தாள் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×