search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிவாளால் ‘கேக்’வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 பேர் கைது
    X

    அரிவாளால் ‘கேக்’வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 பேர் கைது

    ரவுடி பினு பாணியில் அரிவாளால் ‘கேக்’வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அம்பத்தூர்:

    மாங்காடு பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல ரவுடி பினு தனது பிறந்த நாளை பட்டாக்கத்தியால் ‘கேக்’ வெட்டி நண்பர்களுடன் கொண்டாடினார். இதையடுத்து ரவுடி பினு உள்ளிட்ட கூட்டாளிகள் 72 ரவுடிகளை ஒரே நாளில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    இதேபோல் ரவுடி பினு பாணியில் அயனாவரத்தில் வாலிபர் ஒருவர் தனது பிறந்த நாளை அரிவாளால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சி சமூகவலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    ஆவடியை அடுத்த அண்ணனூர் வைஷ்ணவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கார் டிரைவரான இவர் கடந்த மாதம் 17-ந் தேதி, தனது பிறந்த நாளை அயனாவரம், சோலையம்மன் கோவில் மைதானத்தில், நண்பர்களுடன் கொண்டாடினார்.

    அப்போது கிருஷ்ண மூர்த்திக்கு அவரது நண்பர்கள் ஆளுயிர மாலை அணிவித்து, மலர் கிரீடம் வைத்தனர். பின்னர் கிருஷ்ணமூர்த்தி ரவுடி பினு பாணியில் 2 அடி நீள அரிவாளால் கேக்கை வெட்டினார்.

    இதனை அவரது நண்பர்கள் மொபைல் போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலை தளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர்கள் அயனாவரம் வீராசாமி தெருவைச் சேர்ந்த சுனில், நிவாஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது ஆயுத தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×