search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலையில் வி‌ஷம் குடித்த மணப்பெண்: வேறு பெண்ணை மணந்த மாப்பிள்ளை
    X

    தக்கலையில் வி‌ஷம் குடித்த மணப்பெண்: வேறு பெண்ணை மணந்த மாப்பிள்ளை

    தக்கலை அருகே இன்று திருமணம் நடைபெற இருந்த மணப்பெண் திடீரென்று விஷம் குடித்ததால் மாப்பிள்ளை வேறு பெண்ணை மணந்தார்.
    தக்கலை:

    தக்கலையை அடுத்த முட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கப்பலில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த வாலிபருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக இரணியலை அடுத்த திங்கள் நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பெண் பார்த்தனர்.

    இளம்பெண் நர்சிங் படித்துள்ளார். வெளி மாவட்டத்தில் வேலை பார்த்துவருகிறார். இவருக்கும், கப்பலில் வேலை பார்க்கும் வாலிபருக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

    நிச்சயதார்த்தத்தின்போது இன்று திருமணம் நடப்பதாக பேசி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து திருமண நாள் நெருங்கியதும், வாலிபர் கப்பலில் இருந்து ஊருக்கு வந்தார். திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்தார்.

    இதுபோல பெண் வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. அங்கும் அழைப்பிதழ்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது.

    திருமணத்திற்கு முன் தின நாள் மாப்பிள்ளை வீட்டில் இருந்து மணப்பெண்ணுக்கான பட்டுச்சேலை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    இதுபோல நேற்று வாலிபர் வீட்டில் இருந்து மணப்பெண்ணுக்கான பட்டுச்சேலை, சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு மாப்பிள்ளையின் உறவினர்கள் பெண் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்களை வரவேற்க யாரும் இல்லை. மாறாக மணப்பெண் வி‌ஷம் குடித்து விட்டதாகவும், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் கூறப்பட்டது.

    மணப்பெண் வி‌ஷம் குடித்த தகவல் அறிந்து மாப்பிள்ளை வீட்டார் அதிர்ந்தனர். அவர் எதற்காக வி‌ஷம் குடித்தார் என்பதை விசாரித்தபோது, யாரும் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் நொந்து போன மாப்பிள்ளை வீட்டார் அடுத்து என்ன செய்வது? என்ற யோசனையில் இறங்கினர்.

    இதற்குள் நேற்றைய பொழுது முடிந்து இன்று அதிகாலை விடிந்து விட்டது. மாப்பிள்ளை வீட்டார், திருமணத்தை நிறுத்த வேண்டாம் என்று முடிவு செய்தனர். நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணுக்கு பதில் வேறு பெண்ணை மணமகளாக்க முடிவு செய்தனர்.

    அதன்படி, மணமகனின் உறவுப்பெண் ஒருவரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. அவரும் கப்பல் மாப்பிள்ளையை மணக்க சம்மதம் தெரிவித்தார். உடனடியாக அந்த பெண்ணுக்கு மணமகள் அலங்காரம் நடந்தது.

    இன்று காலை குறிப்பிட்ட முகூர்த்தத்தில் மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளையின் உறவுப்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×