என் மலர்
செய்திகள்

நெல்லை அருகே பஸ் தலைகுப்புற கவிழ்ந்ததில் ஒருவர் பலி- 90 பயணிகள் படுகாயம்
ஆலங்குளம்:
நெல்லையில் இருந்து இன்று காலை தென்காசிக்கு ஒன் டூ ஒன் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ் நிலையத்தில் தென்காசிக்கு காத்திருந்ததால் ஏராளமான பயணிகள் இந்த பஸ்சில் ஏறினர்.
வழக்கத்தை விட ஒரு மடங்கு அதிகமான பயணிகள் பஸ்சில் ஏறினர். மொத்தம் 90 பயணிகள் பஸ்சில் இருந்தனர். பஸ்சை டிரைவர் விசாக கணேசன் ஓட்டினார். கபாலி கண்டக்டராக இருந்தார். பஸ் சாலையில் வழக்கத்தை விட அதிக வேகத்தில் சென்றது. பஸ்சில் இருந்த பயணிகள் ஒருவித அச்சத்துடனே பயணித்தனர்.
சிலர் டிரைவர், கண்டக்டரிடம் மெதுவாக செல்லுமாறு கூச்சலிட்டனர். எனினும் பஸ்சின் வேகம் குறைய வில்லை. பஸ் ஆலங்குளம் ஊரின் கீழ்புறம் சிவலார் குளம் விலக்கு அருகே சென்றபோது முன்னால் ஒரு பள்ளி பஸ் சென்றது. அதை அரசு பஸ் முந்த முயன்றது. இந்த வேளையில் முன்னால் சென்ற பள்ளி பஸ் பிரேக் போட்டதால் அரசு பஸ்சை டிரைவர் ஓரமாக திருப்பினார். இதனால் பஸ் ரோட்டோரம் கவிழ்ந்தது.
இதில் பஸ் இருந்த 30 பயணிகளுக்கு பலத்த காயமும், 60 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. 90 பயணிகளும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயமடைந்தார்கள். பஸ்சில் பயணம் செய்த கடையநல்லூர் அருகேயுள்ள சிவராம்பேட்டையை சேர்ந்த ஈஸ்வரன் (83) சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் இருந்த அவரது மனைவி கோமதியம்மாளுக்கும் காயம் ஏற்பட்டது. #busaccident






