search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    144 தடை உத்தரவு நீட்டிப்பு - செங்கோட்டையில் மீண்டும் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
    X

    144 தடை உத்தரவு நீட்டிப்பு - செங்கோட்டையில் மீண்டும் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

    செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Section144 #Sengottai
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பிரனிடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதையடுத்து செங்கோட்டையில் ஒருநாள் 144 தடை உத்தரவு போடப்பட்டு விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துவரபட்டது.

    அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தையடுத்து ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை அனைத்தும் குண்டாற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது,

    இந்நிலையில் மறுநாள் இருதரப்பினரிடமும் கலெக்டர் ஷில்பா தலைமையில், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கருத்துகேட்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்நிலையில் மீண்டும் தென்காசி, செங்கோட்டையில் ஏற்பட்ட சம்பவங்களை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15-ந் தேதி மாலை 8 மணி முதல் இன்று 22-ந் தேதி காலை 6 மணி வரை தொடரும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து செங்கோட்டை நகரை சுற்றி 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பிற்கு பின்னர் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வந்தது. மேலும் தென்மண்டல போலீஸ் ஜ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு-பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.

    இந்நிலையில் இன்று காலையுடன் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது செங்கோட்டை நகராட்சி, புதூர், பண்பொழி, வல்லம், பிரானூர் பார்டர், பெரிய பிள்ளை வலசை, கற்குடி, புளியரை, சுமை தீர்த்தபுரம், தெற்கு மேடு, தேன் பொத்தை, கணக்குபிள்ளை வலசை ஆகிய பஞ்சாயத்துகளில் இன்று காலை 6 மணி முதல் வருகிற 30-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.



    இக்காலங்களில் பொதுக்கூட்டம் - போராட்டம் நடத்துவதற்கும் வேறு எந்தவிதமான ஆர்பாட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் எந்தவொரு இடத்திலும் மேற்குறிய நோக்கத்திற்காக 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடுவதற்கும் வன்முறை தூண்டுவதற்காக ஆயுதங்களோ பிற பொருட்களையோ வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி.க்கள் தனபாலன், முகமது அஸ்லாம் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணிகண்டன், வெற்றி செல்வன், பழனிகுமார் மற்றும் 8 இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 540 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ரெயில்வே கேட் அருகே கூடுதலாக ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  #Section144 #Sengottai
    Next Story
    ×