search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 74 சதவீதம் கூடுதல் மழை
    X

    நெல்லை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 74 சதவீதம் கூடுதல் மழை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டில் 74 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. #NellaiRain
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்டு மாதம் இறுதிவரை மழை பெய்தது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் பிரதான பாசன அணையான பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடு முடியாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் நிரம்பின. மொத்தமுள்ள 11 அணைகளிலும் நீர் இருப்பு மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 771 மில்லியன் கன அடியாகும்.

    தாமிரபரணி பாசனத்தில் சராசரியாக ஆண்டுக்கு 1084 மில்லிமீட்டர் மழை பெய்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்தன. ஆண்டுக்கு சராசரியாக 814.80 மில்லிமீட்டர் மழையே பெய்தது. இதன்காரணமாக அணைகள் முழு அளவில் நிரம்பவில்லை. பாசனத்துக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மாவட்டத்தில் 278 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 165 சதவீதம் அதிகமாகும். பாபநாசம் உள்ளிட்ட அணைப்பகுதிகளிலும், அம்பை, தென்காசி பகுதிகளிலும் அதிகபட்ச மழை பெய்தது. பாபநாசம் அணையில் மொத்தம் 441 மில்லிமீட்டரும், செங்கோட்டை குண்டாறு பகுதியில் 563 மில்லிமீட்டர் மழையும் பதிவானது.

    பொதுவாக ஆகஸ்டு மாதம் மட்டுமே சராசரியாக 23.30 மில்லிமீட்டர் மழை பெய்யவேண்டும். ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 137.76 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இது அதிகபட்சம் ஆகும். 2006, 2008, 2011, 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் சராசரியான மழையை விட கூடுதல் மழை பெய்தது. இந்த ஆண்டு 518.56 மில்லிமீட்டர் பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 74 சதவீதம் அதிகமாகும்.

    இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அணைகளில் மொத்தம் 9055.23 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 60 சதவீதம் கூடுதலாகும்.

    இது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பிசான சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.

    இதனிடையே பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், இந்த அணைகளில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 20-ந்தேதி பாபநாசம் அணை நீர்மட்டம் 141.80 அடியாக இருந்தது. தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் 10 நாட்களில் இந்த அணை நீர்மட்டம் 10 அடி குறைந்து, நேற்று 130.20 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 128.95 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 20-ந் தேதி 146.09 அடியாக இருந்தது. 10 நாட்களில் இந்த அணை நீர்மட்டம் 25 அடி குறைந்து நேற்று 120.47 அடியாக இருந்தது. இன்று இது 119.88 அடியாக உள்ளது.

    பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 1,405 கனஅடி நீரும், சேர்வலாறு அணையில் இருந்து விநாடிக்கு 2003 கனஅடி நீரும் நேற்று வெளியேற்றப்படுகிற‌து.

    இதேபோல் மற்ற அணைகளிலும் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. எனவே விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அணைகளில் நீர் இருப்பு வைத்து பிசான சாகுபடிக்கு உரியநேரத்தில் தண்ணீர் திறக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. #NellaiRain
    Next Story
    ×