search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணமங்கலம் அருகே 8 பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
    X

    கண்ணமங்கலம் அருகே 8 பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

    கணியம்பாடி அருகே மர்ம நபர்கள் கல்வீசி 8 பஸ்களின் கண்ணாடியை உடைத்தனர்.

    கண்ணமங்கலம்:

    வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நேற்று இரவு 9.30 மணி அளவில் கணியம்பாடி மலை கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் பஸ்கள் மீது கற்களை வீசினர். இந்த தாக்குதல் மலை கணவாய் முதல் கொங்கராம்பட்டு பகுதி வரை சென்று கொண்டிருந்த பஸ்கள் மீது நடத்தப்பட்டது. இதில் ஒரு ஆம்னி பஸ் உள்பட 7 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. 

    கல்வீசியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து ஆங்காங்கே பஸ்களை சாலையிலேயே டிரைவர்கள் நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கண்ணமங்கலம், வேலூர் தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மர்ம நபர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து பயணம் செய்ய அச்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதேபோல, கீழ்பள்ளிப்பட்டு அருகே புதுப்பேட்டை பகுதியிலும் ஒரு அரசு பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி உடைத்தனர். அந்த பஸ் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்:- 8 பஸ்களின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்துள்ளதாக தெரிகிறது. ஒரு பைக்கில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் செங்கல்களை பஸ்கள் மீது வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயமில்லை.

    குடிபோதையில் பஸ்களின் கண்ணாடியை உடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனினும் இது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. 2 பேரையும் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    Next Story
    ×