search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஞ்சம் வாங்கிய வேளாண்மை உதவி அலுவலர் பாரதிதாசனை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற போது எடுத்த படம்.
    X
    லஞ்சம் வாங்கிய வேளாண்மை உதவி அலுவலர் பாரதிதாசனை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற போது எடுத்த படம்.

    விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கடலூர் சிறையில் அடைப்பு

    காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள உத்தமசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 75), விவசாயி. இவர் தனது நிலத்தை உழுவதற்காக வேளாண் எந்திரத்தை மானியவிலையில் வாங்க முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் காட்டுமன்னார்கோவில் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது விண்ணப்பம் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ராஜதுரை காட்டுமன்னார்கோவிலில் உள்ள வேளாண்துறை அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த உதவி அலுவலர் பாரதிதாசனை (40) சந்தித்தார். அப்போது அவர் ரூ.39 ஆயிரம் கொடுத்தால்தான் உடனே வேளாண் எந்திரம் வழங்கப்படும் என்றார்.

    இதையடுத்து ராஜதுரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.24 ஆயிரத்தை பாரதிதாசனிடம் கொடுத்தார். அப்போது பணத்தை பெற்றுக்கொண்ட பாரதிதாசன் மீதி ரூ.15 ஆயிரத்தை கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டு ராஜதுரை வந்துவிட்டார்.

    இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை ராஜதுரை பாரதிதாசனிடம் நேற்று வழங்கினார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பாரதிதாசனை மடக்கிபிடித்து கைது செய்தனர். பின்பு அவரை கடலூர் லஞ்சஒழிப்புதுறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த லஞ்சப்பணம் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்பு அவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து பாரதிதாசன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடந்த மாதம் லால்பேட்டையில் துணை மின்நிலைய பணியாளர் ஒருவர் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டார். தற்போது விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய வேளாண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். காட்டுமன்னார்கோவில் பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் வாங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×