என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட பட்டதாரி பெண் திடீர் மயக்கம்
    X

    காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட பட்டதாரி பெண் திடீர் மயக்கம்

    பெண்ணாடம் அருகே காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி 3-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்ட பட்டதாரி பெண் திடீரென மயங்கி விழுந்தார்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரத்தை சேர்ந்தவர் கனிமொழி(வயது 31). எம்.ஏ. பட்டதாரி. இவர் பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன்(32) என்பவரை காதலித்து வந்தார்.

    ஜானகிராமன் பெண்ணாடத்தில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

    தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் ஜானகிராமனிடம் கனிமொழி கூறினார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இது குறித்து விருத்தாசலம் மகளிர் போலீசில் கனிமொழி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜானகிராமன் திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கனிமொழி கடந்த 2 நாட்களாக சவுந்திரசோழபுரத்தில் உள்ள ஜானகிராமன் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து தலைமறைவாகியிருந்த ஜானகிராமன் நேற்று மாலை விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். உடனே ஜானகிராமனை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழியிடம் போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவரை கனிமொழியிடம் பேசும்படி போலீசார் கூறினர்.

    ஆனால் ஜானகிராமன் கனிமொழியிடம் பேச மறுப்பு தெரிவித்தார். அவரை திருமணம் செய்வதற்கும் மறுத்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து ஜானகிராமனை போலீசார் கைது செய்வதாக கூறி விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். உடனே கனிமொழியும் போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த போலீசாரிடம் ஜானகி ராமனை கைது செய்யாதீர்கள். எனக்கு அவரை திருமணம் செய்து வையுங்கள் என கூறினார்.

    ஆனால் திருமணத்துக்கு ஜானகிராமன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை சவுந்திரசோழபுரத்தில் உள்ள ஜானகிராமன் வீட்டின் முன்பு 3-வது நாளாக கனிமொழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது கனிமொழி திடீரென மயங்கி விழுந்தார். இதைபார்த்த கனிமொழியின் உறவினர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு டாக்டரை வரவழைத்து சிகிச்சை அளித்தார்.

    பின்னர் அவர் கையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தொடர் தர்ணா போராட்டத்தில் கனிமொழி ஈடுபட்டு வருகிறார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×