search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 200 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

    மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையத்தில் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    5 ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணை நிரம்பியது. அணையின் மொத்த உயரம் 124 அடி என்றாலும், பாதுகாப்பு கருதி 120 அடி வரை தான் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இந்த அணையின் மூலம் 12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுவருகிறது.

    மேட்டூர் அணை நிரம்பியதால் நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 75,170 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 120.40 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தொடர்ந்து இதே அளவில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் செல்லும் பாதையை ஒட்டி பயிர் செய்யப்பட்டுள்ள பருத்தி, வாழை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணை தண்ணீர் நிறைந்து கடல்போல் காட்சி அளிப்பதையும், 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையும் காண கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

    இந்நிலையில் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 55) என்ற ஓட்டல் தொழிலாளி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் குளிக்க இறங்கினார். அவர் 3 கிலோ மீட்டர் தூரம் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் ஆற்றின் நடுவே இருந்த ஒரு பாறையை பிடித்துக்கொண்டார்.

    அங்கிருந்து காப்பாற்றுங்கள் என சத்தம்போட்டார். ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 3 பேர் சத்தம் கேட்டு, ஒரு கயிற்றை எடுத்துவீசி அவரை பத்திரமாக மீட்டனர்.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பள்ளிபாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் ஏற்கனவே வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இதனால் மக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

    காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள முனியப்பசாமி சிலையின் 13 அடி உயர பீடத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் ஆதிகேசவ பெருமாள் கோவிலை தொட்டபடி காவிரி வெள்ளம் செல்கிறது. கோவிலுக்குள் காவிரி நீர் புகுந்ததால் அங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது.

    குமாரபாளையம் இந்திரா நகரில் உள்ள 5 வீடுகளுக்குள் காவிரி வெள்ளம் புகுந்தது. கரையோர பகுதியில் 39 வீடுகளில் வசித்த குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு நகராட்சி திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு வேண்டிய உணவு வசதிகளையும் செய்துகொடுத்தனர்.

    கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பருவமழை பெய்துவருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் நேற்று 16-வது நாளாக தடை நீடித்தது.  #Metturdam #Cauvery
    Next Story
    ×