search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
    X

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி

    கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம்:

    சேலம், கருப்பூர், சாமி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி சாவித்ரி (வயது 35). மாற்றுதிறனாளி. இவர் இன்று காலையில் தனது 2 குழந்தைகள் அகில், அக்ஷிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று சாவித்ரி மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் திடீரென ஊற்றினார்.

    இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடி வந்து சாவித்ரி தலையில் தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரிடம் சாவித்ரி கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எனது கணவர் அருண்குமார் கிரானைட்டில் கல் உடைக்கும் கூலி வேலை செய்து வருகிறார். அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு என்னையும், குழந்தையும் வீதியில் விட்டு விட்டார். சாப்பாடுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகிறேன். இது பற்றி சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் விசாரணை நடத்தி விட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் என்னை சாகவிடுங்கள்.

    இவ்வாறுஅவர் கூறினார்.

    இதையடுத்து விசாரணைக்காக சாவித்ரியை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதேபோல் சேலம், வீராணம் அருகே உள்ள பெருமானூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 30). இவர் இன்று காலை மனு கொடுக்க வேண்டி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது நுழைவு வாயில் முன்பு நின்று தீ குளிப்பதற்காக திடீரென தலையில் மண்எண்ணையை ஊற்றினார். இதை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியதாவது:-

    நான் மேட்டூர் பகுதியை சேர்ந்த 2 பேரிடம் டாரஸ் லாரி ஒன்றை வாங்குவதற்கு விலை பேசினேன். இதற்கு முன்பணமாக ரூ.2½லட்சம் கொடுத்தேன். மீதி பணம் 15 லட்சம் அவர்களது கணக்கில் வங்கி மூலம் செலுத்தினேன்.

    இதையடுத்து லாரியை தருமாறு கேட்டபோது, அவர்கள் லாரியை தராமல் காலம் இழுத்தடித்து வருகிறார்கள். மேலும் அடிக்கடி கேட்டதால் அடியாட்டிகள் வைத்து என்னை மிரட்டுகின்றனர். இது பற்றி பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதி கிடைக்காததால் உயிரை விடுவதே தவிர வேறு வழியில்லை.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×