search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழி சாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவது கண்டிக்கதக்கது: எர்ணாவூர் நாராயணன்
    X

    8 வழி சாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவது கண்டிக்கதக்கது: எர்ணாவூர் நாராயணன்

    சேலம்-சென்னை 8 வழிசாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார். #ernavoornarayanan #chennaisalem8wayroad

    திருப்பூர்:

    திருப்பூரில் சமத்துவ மக்கள் கழகத்தின் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு பி.என். ரோட்டில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் பாண்டியன் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    திருப்பூரை பொறுத்தவரை சாயக்கழிவு நீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. பெரிய நிறுவனங்கள் சாயக்கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றினாலும், பல சிறிய அளவிலான நிறுவனங்கள் தொடர்ந்து சுத்திகரிக்காமல் சாயக்கழிவுநீரை வெளியேற்றி வருகிறது. இதனால் சிறிய நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுவதற்கான திட்டத்தை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும்.

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி கொள்கையால் பல சிறு, குறு, நடுத்தர பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம்-சென்னை 8 வழிசாலைக்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சேலம்-சென்னை நெடுஞ்சாலைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு பலருக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் தற்போது விவசாய நிலங்கள் கையகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதற்கு பதிலாக தற்போது உபயோகப்படுத்தப்படும் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கலாம். பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தருவதாக முதல்-அமைச்சர் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. மக்கள் போராட்டத்தை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.

    தூத்துக்குடியிலும் இதே போன்று சாதாரணமாக தொடங்கிய போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்காததாலேயே இவ்வளவு பெரிய கலவரமும், உயிரிழப்பும் ஏற்பட காரணம் ஆனது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பது கடினம். தமிழகத்தில் பெயரளவில் மட்டுமே அமைச்சர்கள் உள்ளனர் என்றார்.

    திருப்பூர் வந்த சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு மாநில இளைஞர் அணி துணைசெயலாளர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் செல்வம், பேரவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கலைவாளன் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். #ernavoornarayanan #chennaisalem8wayroad

    Next Story
    ×