search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் தொடர் கைவரிசை - வீடுகளில் கொள்ளையடித்த பலே தம்பதி கைது
    X

    நெல்லையில் தொடர் கைவரிசை - வீடுகளில் கொள்ளையடித்த பலே தம்பதி கைது

    நெல்லை மாவட்டத்தில் வீடுகளில் நகை-பணம் கொள்ளையடித்து கைவரிசை காட்டிய ‘பலே தம்பதி’ கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 200 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
    புளியங்குடி:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சுரண்டை, சேர்ந்தமரம், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், சொக்கம்பட்டி, கடையநல்லூர், குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி இருந்த வீடுகளில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன.

    இந்த சம்பங்களில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை பிடிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டனி, நிஷாந்த், போலீசார் ஜோஸ், விஜய், கிருஷ்ணவேணி, ராஜேந்திரன், வடிவேல் முருகன், வசந்தகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர். தனிப்படை போலீசார், தொடர் கைவரிசையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை தீவிரமாக தேடிவந்தனர்.

    நேற்று முன்தினம் சொக்கம்பட்டியில் உள்ள ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்தவரிடம் வாலிபர் ஒருவர் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் தனிப்படை போலீசார், அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள கள்ளம்புளியை சேர்ந்த செல்வராஜின் மகன் ரவி கார்த்திக் என்ற கார்த்திக்குமார் (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தற்போது புளியங்குடி டி.என்.புதுக்குடியில் வசித்து வந்ததும், ஏற்கனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்று வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் டி.என்.புதுக்குடியில் உள்ள கார்த்திக்குமார் வீட்டை நேற்று காலையில் சுற்றி வளைத்தனர். வீட்டில் இருந்த கார்த்திக்குமார் மற்றும் அவருடைய மனைவி பிரியங்கா (25) ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் கார்த்திக்குமாரிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான், பல்வேறு திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றேன். கடந்த 2016-ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்தேன். 2017-ம் ஆண்டு முதல் பூட்டி இருந்த வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்தேன். அந்த ஆண்டு தென்காசி சொர்ணபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் 10 பவுன் நகைகளையும், கே.ஆர்.காலனியில் உள்ள வீட்டில் 80 பவுன் நகைகளையும், வீரகேரளம்புதூரில் உள்ள 3 வீடுகளில் 32 பவுன் நகைகளும், ரூ.11 லட்சத்தையும் கொள்ளையடித்தேன்.



    அதே ஆண்டு ஜூன் மாதம் குற்றாலத்தில் ஒரு வீடு புகுந்து வெள்ளி பொருட்களையும், சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் தெருவிலுள்ள வீட்டில் 276 கிராம் நகைகளையும், நவம்பர் மாதத்தில் அச்சன்புதூரில் ஒரு வீட்டில் ரூ.35 ஆயிரம், நெடுவயலில் வீடு புகுந்து 17 கிராம் நகையையும் திருடி சென்றேன்.

    டிசம்பர் மாதத்தில் கடையநல்லூரில் வீடு புகுந்து 32 பவுன் நகைகள், ரூ.7 ஆயிரம் திருடினேன். கடந்த ஜனவரி மாதத்தில் வாசுதேவநல்லூரிலும், பிப்ரவரி மாதத்தில் சுரண்டை, சிவகுருநாதபுரத்திலும், மார்ச் மாதத்தில் வாசுதேவநல்லூரில் உள்ள வீடுகளிலும் நகைகள், பணத்தை கொள்ளையடித்தேன். மே மாதத்தில் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் ஒரு வீட்டில் 64 கிராம் நகைகள், ரூ.16 ஆயிரத்தை திருடினேன். இப்படியாக 200 பவுன் வரை நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து கார்த்திக்குமாரையும், இந்த கொள்ளை சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி பிரியங்காவையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

    இந்த பலே தம்பதியை நேற்று போலீசார் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    வீடுகளில் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தின் மூலம் கார்த்திக்குமார் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவருக்கு மதுரை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கள்ளக்காதலிகள் இருந்துள்ளனர். அவர்களுடன் கார்த்திக்குமார் உல்லாசமாக வாழ்க்கை நடத்தி உள்ளார். கள்ளக்காதலிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.60 ஆயிரம் கொடுத்து வந்துள்ளதாகவும், அவர்களை சந்திக்க செல்லும் போது ஆடம்பரமாக செலவு செய்து வந்ததாகவும், அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுத்திருப்பதாகவும் போலீசாரிடம் அவர் கூறினார்.

    பகல் நேரங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று பூட்டி இருக்கும் வீடுகளை அடையாளம் பார்த்து வரும் கார்த்திக்குமார், இரவில் மனைவியுடன் அந்த பகுதிக்கு செல்வார். மறைவான இடத்தில் மனைவி நிற்க வைத்து விட்டு, பூட்டியிருக்கும் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் நகைகளை மனைவியை அணியச் செய்து கொண்டு திரும்புவாராம். கூடுதல் நகைகள் சிக்கும் பட்சத்தில் அதை பிரியங்கா உடலில் மறைத்து வைத்து கொள்வாராம். தம்பதியராக மோட்டார் சைக்கிளில் வருவதால் ஆங்காங்கே சோதனைக்கு நிற்கும் போலீசாரும் அவர்களை தடுத்து நிறுத்த மாட்டார்களாம். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் சாதுர்யமாக போலீசாரை ஏமாற்றி விட்டு கொள்ளையடிக்கும் நகைகள், பணத்துடன் நள்ளிரவில் வீட்டுக்கு பத்திரமாக திரும்பி வந்துள்ளனர்.

    கார்த்திக்குமார் தனது சொந்த ஊரான கள்ளம்புளியில் இருந்து கொண்டு புளியங்குடி டி.என்.புதுக்குடியில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய பங்களாவை கட்டி உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அந்த பங்களாவில் மனைவியுடன் குடியேறி உள்ளார். அந்த வீட்டில் அனைத்து வசதிகளுடன் இந்த தம்பதி வாழ்ந்து வந்தனர். பிரியங்கா நாகரீகமாக உடை அணிந்து நடமாடி உள்ளார். கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வந்துள்ளனர். மேலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு கவனமாகவும் இருந்துள்ளனர். 
    Next Story
    ×