search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் கைவரிசை: கொள்ளையடித்த பணத்தில் சொகுசாக வாழ்ந்த வாலிபர்கள்
    X

    போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் கைவரிசை: கொள்ளையடித்த பணத்தில் சொகுசாக வாழ்ந்த வாலிபர்கள்

    கோவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணத்தை கொள்ளையடித்து அழகிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்த வாடிக்கையாளர்கள் 20 பேரின் வங்கி கணக்கில் இருந்து லட்சக் கணக்கில் பணம் நூதன முறையில் திருட்டு போனது.

    புகாரின்பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஒரு கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ஏ.சி.மிஷினில் மைக்ரோ காமிராக்களை பொருத்தி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு தகவல்களை திருடி, அதன்மூலம் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து பணத்தை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட சென்னை உத்தண்டி பகுதியை சேர்ந்த நவசாந்தன் (வயது 29), சென்னை கானத்தூரை சேர்ந்த நிரஞ்சன்(38), கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிக்கானப்பள்ளியை சேர்ந்த தமிழரசன் (26), வசீம் (30), திருச்சி அன்பில்நகரை சேர்ந்த கிஷோர்(25), திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த மனோகரன்(19) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதில் நவசாந்தன் இலங்கை திரிகோணமலையை சேர்ந் தவர். 2006-ம் ஆண்டு சென்னைக்கு வந்து தங்கிய இவர் பின்னர் சில காலம் கிருஷ்ணகிரியில் வேலை பார்த்தார். இவர் சென்னையில் ஜிம்முக்கு சென்ற போது நிரஞ்சனும், கிருஷ்ணகிரியில் இருந்த போது தமிழரசனும் பழக்கமாகினர்.

    டிப்ளமோ படித்துள்ள நவசாந்தன் ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி பணத்தை திருடுவதில் கைதேர்ந்தவர். லண்டனை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் தான் இந்த திருட்டு தொழில்நுட்பத்தை அவருக்கு கற்றுக் கொடுத்துள்ளார். அவர் மீது இலங்கையிலும் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. என்ஜினீயரான நிரஞ்சன் பணக்கார பெண் ஒருவரை காதலித்தார். அவரை திருமணம் செய்து சுகபோக வாழ்க்கை வாழ அதிகமாக பணம் தேவைப்பட்டது. என்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்திய தமிழரசன் கார் புரோக்கர் தொழில் செய்து அதில் லட்சக் கணக்கில் நஷ்டம் அடைந்தார்.


    எனவே இவர்கள் கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு கடந்த 2016-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா என தென்மாநிலங்கள் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி ரூ.3 கோடிக்கு மேல் கொள்ளையடித்தது தெரியவந்தது.

    கொள்ளையடித்த பணத்தில் பி.எம்.டபிள்யூ, இன்னோவா கார்கள், விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்கள் வாங்கி உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் விமானத்தில் சென்றதோடு, நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி உள்ளனர். தங்களை சினிமாக்காரர்கள் எனவும், சூட்டிங் நடத்த இடம் பார்க்க வந்துள்ளதாகவும் கூறி அறை எடுத்து தங்கிய இவர்கள் மது அருந்தி அழகிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த கும்பல் கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசாரால் ஸ்கிம்மர் கருவி மூலம் பணம் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து, கையெழுத்து போடாமல் தலைமறைவாகி மீண்டும் தமிழகத்துக்கு தப்பி வந்தனர். இங்கு கோவையை தவிர கொடைக்கானல், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கைவரிசை காட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க பயன்படுத்திய லேப்டாப்கள், கார்டு ரீடர்கள், ஸ்கிம்மர் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது எந்தெந்த மாநிலங்களில் எத்தனை வழக்குகள் உள்ளது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கும்பலின் பின்னணியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். குறிப்பாக புதுச்சேரியில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் கைவரிசை காட்டி வரும் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த நவசாந்தன், தமிழரசன், நிரஞ்சன் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #tamilnews

    Next Story
    ×