search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலம் கொடுத்த பெண்களுக்கு கலெக்டர் ரோகிணி இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்
    X
    நிலம் கொடுத்த பெண்களுக்கு கலெக்டர் ரோகிணி இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்

    சென்னை-சேலம் விரைவு சாலை - விவசாயிகளுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை

    சென்னை-சேலம் விரைவு சாலைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு 2½ மடங்கு முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறினார். #ChennaiSalemGreenExpressway
    சேலம்:

    மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

    இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் வழியாக சென்னைக்கு 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள், இடிக்கப்பட உள்ளதால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    8 வழி சாலைக்கான நிலத்தை அளவீடு செய்து கல் அமைக்கும் பணி கடந்த 18-ந்தேதி தொடங்கியது.

    சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் 6-வது நாளாக இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 70 மீட்டர் அகலத்தில் நில அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பசுமை சாலைக்கு நிலம் வழங்கிய ஷோபனா, பூங்கொடி, மணி மேகலை ஆகிய 3 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்.

    அதே இடத்தில் தமிழக அரசின் சார்பில் பசுமை வீடுகள் கட்டி தரப்படும் என்றும் அவர் பயனாளிகளிடம் உறுதியளித்தார். பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தும் நிலங்களில் சுமார் 400 ஹெக்டேர் நிலம் அரசு புறம்போக்கு நிலங்கள் என்பதால் மிக குறைவான எண்ணிக்கையிலே வீடுகள், கட்டிடங்கள் பாதிக்கப்படும். மேலும் நில உடமைதாரர்களுக்கு போதுமான இழப்பீடு, அதாவது தங்க நாற்கர சாலை திட்டத்தின் போது வழங்கப்பட்ட இழப்பீட்டை விட புதிய நில எடுப்பு சட்டத்தின் படி குறைந்தபட்சம் இரண்டரை மடங்கில் இருந்து அதிக பட்சம் 4 மடங்கு வரை இழப்பீடு கிடைக்கும்.

    தற்போதுள்ள சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவதை போல பசுமை விரைவு சாலை திட்டத்தினால் பாதிப்புகள் குறையும். எனவே பொதுமக்களும், அமைப்புகளும் உண்மை நிலையை அறிந்து எதிர்ப்பினை கைவிட்டு திட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    சேலம் மாவட்டத்தில் பசுமை வழி சாலை 36.3 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது. இந்த சாலையின் அகலம் 70 மீட்டர் என கணக்கிடப்பட்டு அதற்கான நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சேலம் மாவட்டத்தில் 11 கிராமங்கள், சேலம் தெற்கு வட்டத்தில் 4 கிராமங்கள், வாழப்பாடி வட்டத்தில் 5 கிராமங்கள் என மொத்தம் 20 கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 186 ஹெக்டேர் தனியார் நிலங்கள், 46 ஹெக்டேர் அரசு புறம் போக்கு நிலங்கள், 16 ஹெக்டேர் வனப்பகுதி உள்பட காப்புக்காடு பகுதிகள் என மொத்தம் 248 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அந்த நிலத்தில் மரங்கள், வீடுகள், மாட்டுக் கொட்டகைகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை இருந்தால் அதற்கேற்றவாறு இழப்பீடு வழங்கப்படும்.

    இதுவரை 11 கிராமங்களுக்கு உட்பட்ட 845 பட்டாதாரர்களின் 194.856 ஹெக்டேர் நில அளவீடு பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த பணி விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நடந்துள்ளது. இதில் 10 சதவீதம் பேர் அதிக இழப்பீடு வேண்டும் என்று கேட்டுள்ளனர்.



    முதல்-அமைச்சர் நிலம் வழங்கியவர்களுக்கு, அதிக இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒரு ஹெக்டேருக்கு ரூ.21.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.9.04 கோடி வரை இழப்பீடு வழங்க வாய்ப்புள்ளது.

    அடிப்படை சந்தை மதிப்பில் இருந்து நகர் புறங்களில் குறைந்த பட்சம் 2 மடங்கும், அதிகபட்சம் 2½ மடங்கு முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    500 சதுர மீட்டர் அளவில் நிலம் , கான்கிரீட் வீடு மற்றும் மரங்கள் இருந்தால் அதற்கு அதிகபட்சமாக ரூ.27.5 லட்சம் வரை இழப்பீட்டு தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. மாட்டு கொட்டகை பாதிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரமும், வீடுகள் பாதிக்கப்பட்டு இடம் பெயர்பவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.36 ஆயிரம் பிழைப்பு ஊதியமாகவும் வழங்கப்படும்.

    பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மீள் குடியேற்ற உதவி தொகையாக ஒரே தவணையிலும், மேலும் இடம் பெயர உதவி தொகையாக ரூ.50 ஆயிரம், சுய தொழில் புரிபவர்கள் அல்லது கைவினைஞர்கள் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரமும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒரு தென்னை மரத்திற்கு ரூ.50 ஆயிரம், மாமரம் ஒட்டுமரத்திற்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம், உள்ளூர் மரத்திற்கு அதிகபட்சமாக ரூ.13 ஆயிரம், கொய்யா மரத்திற்கு ரூ.4 ஆயிரத்து 200, நெல்லி மரத்திற்கு ரூ.4 ஆயிரம், பலா மரத்திற்கு ரூ.9600, புளிய மரத்திற்கு ரூ.9375, பாக்கு மரத்திற்கு ரூ.8477, பனை மரத்திற்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரமும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    பெட்டிக்கடைகளை இடமாற்றம் செய்ய 50 ஆயிரம் ரூபாய் உதவியும், மானிய தொழில் கடன் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தவிர படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க தேவையான பயிற்சிகள் அளித்து அவர்களுக்கு நீட்ஸ், முத்ரா, தாட்கோ உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    நிலம் வழங்க உள்ள நபர்களில் வீடுகள் பாதிக்கப்படுவோருக்கு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்குவதோடு அவர்கள் வீடுகள் கட்டி கொடுப்பதற்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்குவதோடு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    நிலம் வழங்குவோருக்கு இழப்பீடு மற்றும் மறு வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அதன்படி 400 தென்னை மரங்கள் உள்ள தனது தோட்டத்திற்கு இதன் மூலம் ரூ.2 கோடி இழப்பீடு கிடைக்கும் என்று விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    வீடு புகுந்து போலீசார் மிரட்டுவதாக எனக்கு எந்த புகாரும் இதுவரை வரவில்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பொதுமக்கள் பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை-சேலம் 8 வழி பசுமை வழிச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 124 கிலோ மீட்டர் தூரம் அமைய உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

    இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேசினர்.

    அப்போது பசுமை வழிச்சாலை குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். இடத்திற்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். அழிக்கப்படும் கிணறுகளுக்கு மாற்றாக புதிய கிணறுகள் அமைத்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 124 கிலோ மீட்டர் தொலைவு சாலை அமைகிறது. சாலையின் அகலம் 110 மீட்டர் என முதலில் கணக்கிடப்பட்டது. தற்போது, 70 மீட்டர் அகலத்தில் அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான 153 ஹெக்டர் நிலம், 18 ஹெக்டர் வன பரப்பு, 690 ஹெக்டர் தரிசு நிலம், 141 ஹெக்டர் விளைநிலம் உள்பட 861 ஹெக்டர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை செங்கம் தாலுகாவில் 8 கிராமங்களில் 20 கிலோ மீட்டர் தொலைவில் சர்வே முடிந்துவிட்டது. 261 சிறு விவசாயிகள், 158 குறு விவசாயிகள், 35 பெரு விவசாயிகளின் நிலங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், 20 சதவீதம் பேருக்குத்தான் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது.

    கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீடு மட்டுமின்றி, மாற்று இடம் வழங்குதல், கிணறு வெட்ட உதவி, வீடு கட்டித்தருதல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரை 700 விவசாயிகளிடம் கருத்து கேட்டோம். அதில் ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

    பசுமைச் சாலையில் 9 இடங்களில் இணைப்பு சாலை அமையும். இந்த சாலையில் சர்வீஸ் சாலையில் சென்று சேரலாம். கையகப்படுத்தப்படும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, பதிவு செய்யப்பட்ட மதிப்பு ஆகியவற்றில் எது அதிகமோ அதில் 1½ மடங்கு இழப்பீடு வழங்கப்படும். மேலும், திட்டமிடும் காலத்தில் இருந்து 12 சதவீதம் வட்டியும் கிடைக்கும்.

    நிலம் கையகப்படுத்தப் படும் நிலம் உரிமையாளர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் அளித்து, பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு கொடுப்போம். பாதிப்புக்கு தகுந்த இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கையகப்படுத்தும் அரிசி, பருப்பு ஆலைகளுக்கு சதுர அடிக்கு ரூ.75 ஆயிரம், கிணற்றுக்கு ஒன்றரை லட்சம், கட்டமைப்புடன் கூடிய கிணற்றுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம், தென்னைக்கு ரூ.80 ஆயிரம், பனை உள்ளிட்ட மரங்களுக்கு ரூ.2 ஆயிரம், வாழைக்கு ரூ.ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiSalemGreenExpressway
    Next Story
    ×