search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியந்தோப்பு முதியவர் கொலையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கைது
    X

    புளியந்தோப்பு முதியவர் கொலையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கைது

    சென்னை புளியந்தோப்பில் நேற்று காலை முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றம் அவரது கூட்டாளிகளான 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்:

    சென்னை புளியந்தோப்பு நரசிம்மர் தெருவை சேர்ந்த முதியவர் ராதா நேற்று அதிகாலையில் படுகொலை செய்யப்பட்டார். வீட்டு அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்ற அவரை காரில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பிச் சென்றது.

    புளியந்தோப்பு போலீஸ் துணை கமி‌ஷனர் சாய் சரண் தேஜெஸ்வி, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கினார். போலீஸ் விசாரணையில் புளியந்தோப்பு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முதியவர் ராதாவை கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் இன்று காலை கொலையாளிகளை சுற்றி வளைத்து பிடித்தனர். ஆற்காடு சுரேசும், அவரது கூட்டாளிகளான குபேந்திரன், சத்யா, ராஜேஷ், ரவி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு சுரேஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    பிரபல ரவுடியான சின்னா என்ற சின்ன கேசவன் மற்றும் வக்கீல் பகத்சிங் ஆகியோர் கடந்த 2010-ம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக ஆற்காடு சுரேசும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

    இதன்பின்னர், சின்னா கோஷ்டியை சேர்ந்தவர்கள் புளியந்தோப்பு பகுதியில் இருக்கக் கூடாது என்று ஆற்காடு சுரேஷ், மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால் ரவுடி சின்னாவின் கூட்டாளிகள் பலர் அங்கிருந்து சென்று விட்டனர்.

    அதே நேரத்தில் சின்னாவிடம் பல ஆண்டுகளாக கணக்கு பிள்ளையாக பணியாற்றிய முதியவர் ராதா தனது குடும்பத்தினருடன் புளியந்தோப்பு பகுதியிலேயே வசித்து வந்தார். இவர் ஆற்காடு சுரேசின் நடவடிக்கைகளை கண்காணித்து அவ்வப்போது சின்னாவின் கூட்டாளிகளுக்கு தகவல் கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாகவே ஆற்காடு சுரேஷ் ஆத்திரம் அடைந்து ராதாவை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    கொலையுண்ட ராதாவின் மனைவி பெயர் கற்பகம். சம்பத் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். சம்பத் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். #Tamilnews

    Next Story
    ×