search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு உத்தரவு மூலம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியாது- சட்ட நிபுணர்கள் கருத்து
    X

    அரசு உத்தரவு மூலம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியாது- சட்ட நிபுணர்கள் கருத்து

    தமிழக அரசு உத்தரவு மூலம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #SterlitePlant
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் கலவரமாக மாறி 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியது.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. காற்று, நீர், பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆலையை மூட அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

    அரசியல் சாசன சட்டம் 48-ஏ பிரிவின்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாதிக்கப்பட்டால் மாநில அரசு இந்த விவகாரத்தை சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட ஆலையை மூடுவதற்கு உத்தரவிடலாம். இந்த அதிகாரத்தின் மூலம்தான் இப்போது ஆலையை மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆனால், இந்த உத்தரவு மூலம் ஆலையை நிரந்தரமாக மூட முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றால் அரசின் உத்தரவு நிற்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    இது சம்பந்தமாக சுற்றுச்சூழல் சட்ட நிபுணரும், வக்கீலுமான ரித்விக் தத்தா கூறியதாவது:-

    காற்று, தண்ணீர் மாசு சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆலையை மூட உத்தரவிடும் போது அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். ஆதாரங்கள் அடிப்படையில் தான் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

    ஆனால், தமிழக அரசு அதற்கான உரிய ஆதாரங்களை வைத்திருக்கிறதா? என்று தெரியவில்லை. இந்த விவகாரம் கோர்ட்டுக்கு செல்லும் போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். அதுவும் போதுமான ஆதாரங்கள் அதில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தடை உத்தரவை நிரந்தரமாக்க முடியும்.

    ஏற்கனவே இந்த விவகாரங்கள் கோர்ட்டிலும், மத்திய பசுமை தீர்ப்பாயத்திலும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கோர்ட்டில் இதன் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆதாரங்கள் நிச்சயமாக சமர்பிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் ஆலையை நிரந்தரமாக மூட முடியாது.

    2013-ம் ஆண்டு இதே போல் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், கோர்ட்டுக்கு சென்று உத்தரவை ரத்து செய்ய வைத்தனர். அந்த நிலை இப்போதும் தொடருமானால் அரசு தடை நீடிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2013-ம் ஆண்டு ஆலையில் இருந்து வி‌ஷவாயு கசிவதாகவும், இதனால் கண் எரிச்சல், தொண்டை வலி, மூச்சு திணறல் ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார் கொடுத்தனர்.

    இதையடுத்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டது.

    இந்த விவகாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஆலை சார்பில் கொண்டு சென்றனர். ஆனால், பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் போதிய ஆதாரங்களை வழங்க முடியவில்லை.

    எனவே, அப்போது பசுமை தீர்ப்பாயம் ஆலையை நடத்த அனுமதி அளித்தது. பசுமை தீர்ப்பாயம் 145 பக்கத்துக்கு தீர்ப்பு வழங்கி இருந்தது.

    அதில், ஆலை எவ்வாறு செயல்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை எந்த முறையில் கையாள வேண்டும் என்பது பற்றி எல்லாம் தெளிவாக கூறப்பட்டு இருந்தது. அதை மீறி இருக்கிறார்களா? என்பதை ஆதாரத்துடன் கூறினால்தான் மூட உத்தரவிட்டது செல்லும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சல்பர் டை ஆக்சைடு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக வெளியேறுவதாக கேர் ஏர்சென்டர் என்ற அமைப்பு கண்டுபிடித்து கூறியது.

    அதாவது சல்பர் டை ஆக்சைடு 477.53 பி.பி.எம். அளவுக்கு வெளியேற்ற அனுமதி உள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் 803.5 பி.பி.எம்.மில் இருந்து 1123.6 பி.பி.எம். வரை வெளியேற்றப்பட்டதாக அந்த அமைப்பு கூறியது.

    ஆனால், ஸ்டெர்லைட் ஆலை இதை மறுத்தது. தங்கள் ஆலையில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கருவியில் சல்பர்டைஆக்சைடு வெளியேற்றம் மிக குறைவாக இருப்பதாக பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது.

    மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அக்டோபர் 2012-ல் இருந்து மார்ச் 2013 வரை எடுத்த ஆய்வில் அனுமதிக்கப்பட்டதை விட 84 மடங்கு மாசு அதிகமாக இருப்பதாக கூறி இருந்தது.

    ஆனால், இந்த வாதங்கள் எதுவும் பசுமை தீர்ப்பாயத்தில் எடுபடவில்லை. பசுமை தீர்ப்பாயம் சில நிபந்தனைகளை விதித்து ஆலையை திறக்க உத்தரவிட்டது.

    மேலும் தற்போது ஆலை மீதான வழக்கு கோர்ட்டில் நிலுவையிலும் இருக்கிறது. எனவே, தற்போதைய உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை கோர்ட்டுக்கு செல்லும்.

    ஆலையை மூட உத்தரவிட்டதற்கான காரணங்களை உரிய ஆதாரத்துடன் நிரூபிப்பது கடினம். எனவே, ஆலையை மீண்டும் இயக்க கோர்ட்டு உத்தரவிடுவதற்கே வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். #SterlitePlant
    Next Story
    ×