search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஸ்டேட்பாங்க் மூடப்பட்டுள்ளது.
    X
    வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஸ்டேட்பாங்க் மூடப்பட்டுள்ளது.

    விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. #BankStrike
    விழுப்புரம்:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 2 நாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். ஊதிய உயர்வு தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. இதனால் ஏற்கனவே அறிவித்தப்படி இன்று முதல் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் 145 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளதால் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பணபரிவர்த்தனை செய்ய முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திறந்திருந்த ஒரு சில வங்கிகளிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் வங்கி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த வேலைநிறுத்தத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ரூ.150 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் 185 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. 1650 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வேலை நிறுத்தத்தால் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. மாத கடைசி என்பதால் சம்பளம் பணம் வங்கியில் போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.200 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    வங்கி ஊழியர்கள் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் நேற்று இரவு முதலே ஏ.டி.எம்.களில் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்து வருகின்றனர். போராட்டம் முடிந்த பின்னர் தான் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படும் என்பதால் ஏ.டி.எம்.களில் பணம் இன்றே காலியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதியது.

    விழுப்புரத்தில் இன்று காலை வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கே.கே.சாலையில் உள்ள ஸ்டேட்பாங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். #BankStrike
    Next Story
    ×