search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடியில் இன்று தண்டவாளத்தில் திடீர் விரிசல்: 5 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
    X

    வாணியம்பாடியில் இன்று தண்டவாளத்தில் திடீர் விரிசல்: 5 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

    வாணியம்பாடியில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக 5 ரெயில்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்பட்டன.

    வாணியம்பாடி:

    சேலத்தில் இருந்து சரக்கு ரெயில் சென்னைக்கு இன்று அதிகாலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வளையாம்பட்டு பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே அதிகாலை 4 மணியளவில் வந்தபோது, சிக்னல் கிடைக்க வில்லை.

    இதை கவனித்த என்ஜின் டிரைவர், சரக்கு ரெயிலை நிறுத்திவிட்டு சிக்னல் அருகே சென்று பார்த்தார். அப்போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்.

    இதுகுறித்து, என்ஜின் டிரைவர் உடனடியாக ஜோலார்பேட்டை ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். கோட்ட பொறியாளர் அபிஷேக் வர்மா தலைமையில் 40- க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தண்டவாள விரிசல் ஓரளவு சரிசெய்யப்பட்டது.

    இதற்கிடையே, தண்டவாள விரிசல் காரணமாக சென்னை நோக்கி சென்ற ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், திருவனந்தபுரம், மங்களூரு, யஸ்வந்த்பூர், அரக்கோணம் பயணிகள் ரெயில் உள்ளிட்ட 5 ரெயில்கள் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டன.இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    தண்டவாளத்தை ஓரளவு சீரமைத்த பிறகு, நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்கள், 5 கிலோ மீட்டருக்கும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. தண்டவாளம் சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு, தண்டவாளத்தின் இருபுறமும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதாக ரெயில்வே ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஏற்கனவே, ஆம்பூர் விண்ண மங்கலத்திலும் இதுபோன்று மண் அரிப்பு ஏற்பட்டதால் பெரும் விபத்து நேரிட்டு இருக்கும்.

    அப்போதும், தண்டவாள விரிசல் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால், ரெயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, விரிசல் ஏற்பட்ட இருப்பு பாதைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

    ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்று ரெயில்வே துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×