search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.2½ கோடி செலுத்தாததால் 5 அரசு பஸ்கள் ஜப்தி
    X

    ரூ.2½ கோடி செலுத்தாததால் 5 அரசு பஸ்கள் ஜப்தி

    கோர்ட்டு உத்தரவிட்ட ரூ.2½ கோடி செலுத்தாததால் 5 அரசு பஸ்கள் மீது நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நோட்டீசை ஒட்டினார்கள். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் காயங்குளத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு தனியார் ரப்பர் ஆலை செயல்பட்டு வந்தது. அந்த ஆலை கடந்த 1991-ம் ஆண்டு வரை அரசு போக்குவரத்து கழகத்தில் வாகனங்களின் டயர்களுக்கு ரீபட்டன் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டது.

    இந்த நிறுவனத்திற்கு போக்குவரத்து கழகம் 2 கோடியே 42 லட்சத்து 64 ஆயிரத்து 902 வழங்க வேண்டும். ஆனால் போக்குவரத்து கழகம் பணம் கொடுக்காததால் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ரப்பர் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி சதிகுமார் ரப்பர் ஆலைக்கு நெல்லை கோட்ட போக்குவரத்து நிர்வாக இயக்குனர் பணம் கொடுக்க உத்தரவிட்டார். ஆனால் அந்த பணத்தை போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதையடுத்து அரசு போக்குவரத்து கழகத்தில் இயங்கும் 50 பஸ்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து வடசேரி பஸ் நிலையத்திற்கு கோர்ட்டு அலுவலர் யோகஷ்வரன் தலைமையில் பணியாளர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அங்கு வந்த நெல்லை கோட்டத்திற்குட்பட்ட பஸ்களை ஜப்தி செய்ய தொடங்கினார்கள்.

    நீதிமன்ற ஊழியர்கள் பஸ் நிலையத்தில் நின்ற பஸ்களில் ஜப்தி நோட்டீசை ஒட்டினார்கள். சுமார் 10 பஸ்களில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதில் 5 பஸ்களில் பயணிகள் பஸ்சின் உள்ளே இருந்தனர். அவர்கள் பஸ்சை விட்டு கீழே இறக்க மறுத்தனர்.இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கோர்ட்டு ஊழியர்கள், ரப்பர் ஆலை வக்கீல்களுடன் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதிகாரிகள் தரப்பில் இன்று பணத்தை செலுத்துவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. ஜப்தி செய்ய நோட்டீஸ் ஓட்டப்பட்டிருந்த 5 பஸ்களை விடுவித்தனர். 5 பஸ்களை மட்டும் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து பனிமனைக்கு கொண்டுச் சென்றனர்.
    Next Story
    ×