என் மலர்
செய்திகள்

கடலூர் சில்வர்பீச்சில் தொடர்ந்து கடல் உள்வாங்குவதால் பொதுமக்கள் பீதி
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர்பீச் உள்ளது. இங்கு விடுமுறை தினங்களில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்வர் பீச்சில் கடல் உள்வாங்கியது. ஒரு வாரம் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென கடல் 20 அடி தூரம் உள்வாங்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடலில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.
இரவிலும் கடல் உள்வாங்கியே இருந்தது. இன்று காலை வரை அதேநிலை நீடித்தது. கடல் அமைதியாக இருந்தது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சில்வர்பீச்சுக்கு வரவில்லை.
அடிக்கடி கடல் உள்வாங்குவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சுனாமி தாக்குதலுக்கு பின்னர்தான் கடலூர் சில்வர் பீச்சில் கடல் உள்வாங்குவதும், கடலில் ராட்சத அலைகள் எழுந்து சீற்றமாக காணப்படுவதும் நடந்து வருகிறது.
இதற்கு சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. காலமுறை மாற்றத்தால் கடல் உள்வாங்கும் சம்பவம் நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்தோம். குழந்தைகள் கடற்கரையில் விளையாடி கொண்டிருந்தனர். திடீரென கடல் உள்வாங்கியதை பார்த்ததும் திகைத்துப்போனோம். உடனே அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினோம்.
அந்த நேரத்தில் போதிய அளவு போலீசாரும் அங்கு இல்லை. மேலும் இதுபோன்ற கடல் சீற்றம் அடிக்கடி நிகழ்வதால் கடல் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து சரியான காரணத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகள், மீனவர்களை காக்க வேண்டும் என்றனர்.






