search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி உண்ணாவிரதத்தால் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு
    X

    வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி உண்ணாவிரதத்தால் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு

    வேலூர் பெண்கள் ஜெயிலில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரி உண்ணாவிரதம் இருந்த நளினி ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் பெண்கள் ஜெயிலில் தண்ணீர் வசதி இல்லாததால் நளினி 4 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார் என்று அவரது வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கடந்த வாரம் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்ட நளினி உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டிடம் கேட்டபோது நளினி உண்ணாவிரதம் இருப்பதாக பரவும் தகவல் வதந்தி என்றார். நளினி உண்ணாவிரதம் இருப்பதாக கிடைத்த தகவல் அறிந்த அவரது வக்கீல் புகழேந்தி நேற்று வேலூர் பெண்கள் மத்திய ஜெயிலுக்கு வருகை தந்து நளினியை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு ஜெயில் வாசலில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நளினி ஜெயிலில் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவரை சந்தித்து பேச வந்தேன். இந்த சந்திப்பில் நளினி ஜெயிலில் கடந்த வாரம் புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

    பெண்கள் ஜெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகள் குளிக்க, குடிக்க தண்ணீர் வசதி இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து தண்ணீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதடைந்துள்ளதாக ஜெயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரி நளினி ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்துள்ளார். ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த பின் உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டார். அவர் 6 மாதம் விடுப்பு (பரோல்) கேட்டு கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி சிறைத்துறைக்கு விண்ணப்பித்திருந்தார். அந்த மனு குறித்து கடந்த 2 மாதம் ஆகியும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் சென்னை ஐகோர்ட்டை அணுக உள்ளோம்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் விடுதலைக்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.

    இதேபோல தற்போதுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த மாதம் 18-ந் தேதி நளினி சார்பில் தமிழக அரசுக்கு விண்ணப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலை அடைவார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×