search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதி சிங்காரம்
    X
    கைதி சிங்காரம்

    பாளையில் கைதி வெட்டிக்கொலை: குமரியை சேர்ந்த மேலும் ஒருவர் கைது

    பாளையங்கோட்டையில் கைதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குமரியை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    தூத்துக்குடி அருகே உள்ள பழையகாயல் புல்லாவழி கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் என்ற பாலசுப்பிரமணியன் (வயது47). இவர் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், மோதல், வெடி குண்டு வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதி பாளை மத்திய ஜெயிலில் இருந்து கைதி சிங்காரத்தை போலீஸ் வாகனத்தில் தூத்துக்குடிக்கு போலீசார் அழைத்து சென்ற போது, பாளை கே.டி.சி. நகரில் 15 பேர் கும்பல் வழிமறித்து போலீசாரின் மீது தாக்குதல் நடத்தி கைதி சிங்காரத்தை வெட்டிக் கொலை செய்தது.

    சினிமா பாணியில் நடந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் துப்பு துலக்க பாளை போலீஸ் உதவி கமி‌ஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சிங்காரம் கொலையில் சுபாஷ் பண்ணையாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    பழையகாயலை சேர்ந்த சுபாஷ் பண்ணையாரை கடந்த வருடம் கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பின்னணியில் சிங்காரம் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை தீர்த்துக்கட்ட சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் சதித்திட்டம் தீட்டினர்.

    அதன்படி சிறையில் இருந்து போலீஸ் வாகனத்தில் அழைத்துவரப்பட்ட சிங்காரத்தை அவர்கள் வெட்டிக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சுபாஷ் பண்ணையார் உள்பட 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவர்கள் பயன்படுத்திய கார்கள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர்கள். ஒருசிலர் விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

    1.அருள்மணி (28), 2.சந்தோஷ் (26), 3.கார்மேகம் (19), 4.அஜின் (எ) சேட்டன் (20), 5.ஷேக் வெஸ்லி (33), 6.எட்வின் ராபர்ட் (36), 7.சண்முகசுந்தரம் (31), 8.அந்தோணிசாமி (31), 9.அணில்குமார் (எ) ஹாரி (27), 10.மோகன் (49).

    இவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கைதி சிங்காரம் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் சதீஷ்குமார் (34) என்பவரை நேற்று கைது செய்தனர். இவர் குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள பொத்தவிளை கல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவரை நேற்று இரவே நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

    கைதி சிங்காரம் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுபாஷ் பண்ணையார் மற்றும் சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×