என் மலர்
செய்திகள்

மனதில் இருப்பதை சொல்லுங்கள் - எம்.எல்.ஏக்களிடம் தனித்தனியாக கேட்ட சசிகலா
சென்னை கூவத்தூரில், தனியார் விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ-க்களை, தனித்தனியாக அழைத்து பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை சசிகலா அளித்திருந்தாலும், உடனடியாக அவரை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சசிகலா இன்று பிற்பகல் கூவத்தூர் சென்று நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன், செங்கோட்டையன், தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஒவ்வொரு எம்.எல்.ஏக்களையும் தனித் தனியாக அழைத்துப் பேசிய சசிகலா, அவர்களின் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறுமாறு கேட்டுள்ளார். குறிப்பாக மக்களிடம் தனக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் யார் முதல்வராக வரவேண்டும் என நினைக்கின்றனர், என பல கேள்விகளை எம்.எல்.ஏக்களிடம் எழுப்பியுள்ளார்.
எம்.எல்.ஏக்களும், சசிகலாவிடம் தங்களது தனிப்பட்ட விருப்பத்தையும் பகிர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்ட சசிகலா தனது இல்லத்திற்கு திரும்பினார்.
Next Story